கிரிக்கெட்
இந்திய வீரர்கள் தனது சொந்த நலன் கருதியே விளையாடுகிறார்கள்: சஞ்சய் பங்கர்

வீரர்கள் தங்களது சொந்த நலன் கருதியும், கரியரை தக்க வைக்கவும் விளையாடுகிறார்கள் என்பது தெரிகிறது என பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். #SanjayBangar
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். இதில் ஷிகர் தவான் 35(65) ரன்களிலும், அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் 23(53) ரன்களிலும், புஜாரா 14(31) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரகானே, விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடினர். தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய  விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரகானேவும் 13-வது அரை சதத்தை பதிவு செய்தார்.  பின்னர்  ரகானே 81(131) ரன்களில் வெளியேறிய நிலையில், சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 97(152) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பாண்ட்யாவும் 18(58) ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 307 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தனது சொந்த நலன் கருதியே விளையாடுகின்றனர் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 

வீரர்கள் தங்களது சொந்த நலன் கருதியும், கரியரை தக்க வைக்கவும் விளையாடுகிறார்கள் என்பது தெரிகிறது. சில நேரங்களில் ஆட்டம் நமக்குச் சாதகமான இல்லாமல் இருக்கும் போது நாம் மன அமைதி காக்க வேண்டும். சூழ்நிலைகள் நமக்கு  சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் ஒரே உணர்வுடன் மனதில் வைத்து விளையாட வேண்டும். வெளிநாடுகளில் விளையாடிய கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் செஞ்சூரியன் டெஸ்ட் தவிர அனைத்து டெஸ்ட்களிலும் மிகவும் சோதனையான சூழ்நிலையில் விளையாடியுள்ளோம். ஜோஹன்ஸ்பெர்க் வெற்றி சோதனையான நேரத்தில் பெற்ற வெற்றியாகும். பேட்ஸ்மேன்களிடமிருந்து வேலை வாங்க நாங்கள் ஒன்னும் மந்திரகோலை உபயோகிக்கவில்லை என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நேற்று தொடக்க வீரர்களின் ஆட்டம் எதிர்பார்த்த வகையில் இருந்தது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 15 ஓவர்களில் 2-3 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அதனால் நடுவே வீசக்கூடிய ஓவர்கள் கடினமானது. இந்த டெஸ்ட்டில் இதுவரை பேட் செய்யும் விதம் நன்றாகவே இருக்கிறது எனக் கூறினார்.