கிரிக்கெட்
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: இந்திய கேப்டன் கோலி மீண்டும் முதலிடம்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
துபாய்,

நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்த கோலி, 2-வது டெஸ்டில் சோபிக்காததால் 2-வது இடத்துக்கு சறுக்கினார்.

இந்த நிலையில் 3-வது டெஸ்டில் 97, 103 ரன்கள் வீதம் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்று கலக்கியதன் மூலம் கோலி 18 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 937 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ ஆகியிருக்கிறார். அவரது அதிகபட்ச தரவரிசை புள்ளி இதுவாகும். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்துக்கு (929 புள்ளி) இறங்கியுள்ளார். 3-வது இடத்தில் இருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5-வது இடத்துக்கு (818 புள்ளி) தள்ளப்பட்டார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் (847 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 4-வது இடத்திலும் (820 புள்ளி) உள்ளனர். இந்தியாவின் புஜாரா மாற்றமின்றி 6-வது இடத்தில் (763 புள்ளி) நீடிக்கிறார். மற்ற இந்திய வீரர்கள் ரஹானே 19-வது இடத்திலும் (4 இடம் ஏற்றம்), ஷிகர் தவான் 22-வது இடத்திலும் (4 இடம் உயர்வு) இருக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ரபடா (தென்ஆப்பிரிக்கா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா) தொடருகிறார்கள். நாட்டிங்காம் டெஸ்டில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து தடுமாறிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 இடம் சரிந்து 7-வது இடத்தில் இருக்கிறார். இதே போட்டியில் தலா 5 விக்கெட்டுகளை சாய்த்த இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 23 இடங்கள் எகிறி 51-வது இடத்தையும், ஜஸ்பிரித் பும்ரா 8 இடங்கள் உயர்ந்து 37-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.