கிரிக்கெட்
இந்திய பந்துவீச்சின் எதிர்காலம்... ஷிவம்!

ஆஸ்திரேலிய புயல் பிரெட் லீ வாயால் ஓர் இந்திய வேகப் பந்து வீச்சாளர் பாராட்டுப் பெறுகிறார் என்றால் சாதாரண விஷயமா? அந்தப் பெருமைக்குச் சொந்தமான இளம் வீரர், ஷிவம் மாவி.
19 வயது ஷிவம் மாவியை ‘இந்திய பந்துவீச்சின் எதிர்காலம்’ என்றார், பிரெட் லீ.

டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ஷிவம் மாவி, கடந்த ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போதுதான் கவனம் பெற்றார்.

அப்போது, தொடர்ச்சியாக 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய ஷிவம் மாவி, வேகப்பந்து வீச்சுக்குப் பழக்கமான ஆஸ்திரேலிய வீரர்களையே திணறடித்தார்.

அதற்கு உடனடிப் பரிசாக, ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார் இவர்.

ஆனால் ஷிவம் மாவியைப் பற்றிய ஓர் ஆச்சரியமான ரகசியம், இவர் பந்துவீச்சை விட மட்டைவீச்சில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது.

நொய்டாவில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி பெற்றுவந்த ஷிவம், மட்டை பிடிப்பதிலேயே விருப்பம் காட்டினார்.

அதுகுறித்து, ‘‘நான் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். ‘ஒன் டவுன்’ பேட்ஸ்மேனாக களம் இறங்குவேன். அந்நாட்களில் நான் பந்து வீச்சில் பெரிதாக ஈடுபாடு காட்டியதில்லை. வலைப்பயிற்சியின் போது சும்மா சிறிதுநேரம் பந்துவீசுவேன். அப்போது எனது பந்துவீச்சைக் கவனித்த பயிற்சியாளர் பூல்சந்த் சர்மா, பவுலிங்கில் அதிக கவனம் செலுத்துமாறு கூறினார். அதன்படி பந்து வீச வீச, எனது பந்துவீச்சுத் திறன் மேம்பட ஆரம்பித்தது. இப்படித்தான் நான் ஒரு பந்துவீச்சாளராக உருவாக ஆரம்பித்தேன்’’ என்கிறார்.

இப்போதும் தான் ஒரு பந்துவீச்சாளராக அறியப்பட்டாலும், பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார். அதிலும், பின்வரிசையில் இறங்குவதால் இஷ்டம் போல விளாசலாம் என்பது தனக்குப் பிடித்த விஷயம் என்கிறார்.

‘‘ஆமாம்... இப்போதும் பேட்டிங் எனக்குப் பிடித்த விஷயம். நான் பேட்டிங் செய்யக் களமிறங்கும்போது, என்னால் நன்றாக விளையாட முடிகிறது. அது எனக்குப் பிடித்தும் இருக்கிறது.’’

பிரெட் லீயின் பாராட்டு பற்றி...

பிரெட் லீயைப் போன்ற பிரபல வீரரின் பாராட்டு, ஷிவம் மாதிரியான இளம் வீரருக்கு உண்மையில் சுமையாகவே இருக்கும். ஆனால் அவர் அதுகுறித்து அலட்டிக்கொள்ளவில்லை...

‘‘பிரெட் லீயின் பாராட்டை நான் நெருக்கடியாகக் கருதவில்லை. இதுபோன்ற பாராட்டுகள் என்னை நல்லவிதமாகவே உணரவைக்கின்றன. அதேநேரம், நான் எனது பலவீனங்களைக் குறைக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. நான் நல்ல வேகத்தில் பந்து வீசலாம், ஆனால் அதன் நீள, அகலமும் சரியாக இருக்க வேண்டும்.’’

எந்தத் துறையில் சாதிக்க நினைப்பவருக்கும் ஒரு நல்ல குரு அமைவது வரம். தனக்கு அந்த வரம் ராகுல் டிராவிட் ரூபத்தில் அமைந்திருப்பதாகக் கூறுகிறார்.

‘குரு’ டிராவிட்

உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர் டிராவிட். உலகக் கோப்பையை நோக்கிய பயணத்தில் டிராவிட் இளம் திறமைசாலிகளை அடையாளம் காணவும், அவர்களை வளர்த்தெடுக்கவும் மேற்கொண்ட முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது.

அதுகுறித்து ஷிவமும், ‘‘ஜூனியர் அணியில் விளையாடி மேலே வந்ததன் காரணமாக, என்னால் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஜாம்பவான் டிராவிட் போன்றோரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அற்புதமான வாய்ப்புக் கிட்டியது. நாம் எவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது என்று நான் நினைத்தேன். எனக்கு ஒரே பின்னடைவாக இருப்பது, அனுபவக் குறைவுதான். சீனியர்களுடன் விளையாடுவதன் மூலம் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முயல்கிறேன்’’ என்கிறார் நிதானமாக.

ஐ.பி.எல். அனுபவம்

ஐ.பி.எல்.லில் ஆடியது பற்றி, ‘‘அது ஒரு நல்ல, சிலசமயங்களில் கடினமான அனுபவம். ஐ.பி.எல்.லில் தவறுக்கு அதிக இடம் கிடையாது. சில நேரங்களில், ஆட்டத்தில் கவனம் செலுத்துவதும் கஷ்டம். அந்த மாதிரியான சூழலில், நெருக்கடியை எப்படிக் கையாளுவது என்று நான் சீனியர்களிடம் கேட்பேன். பேட்டிங், பவுலிங் குறித்து பயிற்சியாளர் ஜாக்கஸ் காலிசிடமும் ஆலோசனை பெறுவேன். நம் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசப்படும்போது என்ன செய்ய வேண்டும் என ஹீத் ஸ்டிரீக்கும் எடுத்துச் சொல்வார்’’ என்று தனக்கு உதவியவர்கள் பற்றி ஷிவம் மாவி கூறுகிறார்.

தனது வேகத்துக்கு, காயங்களே அவ்வப்போது தடை போடுவதாக இவர் தெரிவிக்கிறார்.

‘‘நான் காயமடைய நேரும்போதெல்லாம், எதிர்மறை எண்ணங்கள் என் மனதை ஆக்கிரமிக்காமலும், அதன் மூலம் நான் நிலைகுலைந்து போய்விடாமலும் பார்த்துக்கொள்கிறேன். காயத்தில் இருந்து எப்படி, எவ்வளவு விரைவாக மீளுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்றவை எல்லாம் தானாக நடக்கும்’’ -ஷிவம் மாவியின் பேச்சில் தெளிவு தெரிகிறது.

உடல்தகுதியிலும், பந்துவீச்சிலும் மட்டும் கவனம் செலுத்தினால், ஷிவம் மாவி இந்திய சீனியர் அணியில் ஆடும் நாள் வெகு தொலைவில் இல்லை!