4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 6000 ரன்களை கடந்து விராட் கோலி அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 6000 ரன்களை கடந்து அசத்தினார் கேப்டன் விராட் கோலி.

Update: 2018-09-01 02:13 GMT
சவுதம்டன்,

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் சவுதம்டனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதை தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது.

நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு தவான் (23), ராகுல் (19) ஏமாற்றினர். கோலி (46) ஓரளவு கைகொடுத்தார். இதில் கேப்டன் விராட் கோலி 6 ரன்களை சேர்த்த போது , டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 6000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். தனது 70 வது டெஸ்ட் போட்டியில் , 119 வது இன்னிங்சில் , கோலி இந்த மைல் கல்லை எட்டியுள்ளார் . முன்னதாக  117 இன்னிங்சில் கவாஸ்கர் , இச்சாதனையை செய்தார் . சச்சின் (120 இன்னிங்க்ஸ் ), சேவாக் (123), டிராவிட் (125) ஆகியோரும் முறையே அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் முதல் ஆயிரம் ரன்களை எடுக்க , விராத் கோலிக்கு 27 இன்னிங்ஸ் தேவைப்பட்டது . தற்போது , 5000 ரன்களில் இருந்து 6000 ரன்களை எட்ட , அவருக்கு 14 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 27 ரன்கள் அதிகமாகும். புஜாரா 132 ரன்களுடன் (257 பந்து, 16 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 27 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

மேலும் செய்திகள்