கிரிக்கெட்
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் லசித் மலிங்கா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். #AsiaCup
கொழும்பு,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில்  ஆசிய கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில், ஒரு வருடத்துக்கு பிறகு மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டிருந்த தனுஷ்கா குணதிலகாவும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யார்க்கர் வீசுவதில் தனித்துவம் வாய்ந்த இவர், சமீப காலமாக இலங்கை அணியில் தேர்வுசெய்யப்படாமல் இருந்து வந்தார். இலங்கை சென்றிருந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த வருடம், செப்டம்பர் மாதம் பங்கேற்ற மலிங்கா, அதன் பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஆசிய கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில் மலிங்கா பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-

மேத்யூஸ் (கேப்டன்). குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், உபுல் தாரங்கா, தினேஷ் சண்டிமால், தனுஷ்கா குணதிலகா, திசாரா பெரேரா, தஷூன் சனகா, தனஞ்செயா டி சில்வா, அகிலா தனஞ்செயா, தில்ருவான் பெரேரா, அமிலா அபோன்சோ, கசுன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, லசித் மலிங்கா.