கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி டெஸ்ட் போட்டியில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். அத்துடன் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
சவுதம்டன்,

சவுதம்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதல் இன்னிங்சில் 46 ரன்னும், 2-வது இன்னிங்சில் 58 ரன்னும் எடுத்தார். 70-வது டெஸ்டில் ஆடிய விராட்கோலி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் உதவியுடன் டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார். 2-வது இன்னிங்சில் அவர் மற்றொரு பெருமையை தனதாக்கினார்.

2-வது இன்னிங்சில் எடுத்த ரன்கள் மூலம் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். 39 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து விராட்கோலி இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார். இந்த வகையில் இந்திய கேப்டன்களில் டோனி 60 டெஸ்டில் விளையாடி 3,454 ரன்கள் சேர்த்து விராட்கோலிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறார்.

மேலும் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்னை வேகமாக எட்டிய வீரர் என்ற சிறப்பையும் விராட்கோலி பெற்றார். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் லாரா 40 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன் இலக்கை எட்டியதே விரைவானதாக இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய கேப்டன் விராட்கோலி இதுவரை 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டி தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற புகழையும் தன்வசப்படுத்தினார். மேலும் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் திரட்டிய ஆசிய கண்டத்தை சேர்ந்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் தனதாக்கினார்.

அத்துடன் இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி முடிவில் வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 929 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்தை சேர்ந்த கனே வில்லியம்சன் 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 820 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோரூட் 809 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் புஜாரா (798 புள்ளிகள்) 6-வது இடத்தில் தொடருகிறார். பந்து வீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (896 புள்ளிகள்) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா (882 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (832 புள்ளிகள்) 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். இந்திய வீரர் அஸ்வின் (777 புள்ளிகள்) 8-வது இடம் வகிக்கிறார்.