ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-04 22:30 GMT
லாகூர்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதற்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் 37 வயதான முகமது ஹபீஸ், இமாத் வாசிம், யாசிர்ஷா ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, உஸ்மான் கான், முகமது அமிர், ஷஹீன் அப்ரிடி, ஜூனைத் கான் ஆகிய 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதில் 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட 18 வயதான ஷஹீன் அப்ரிடியை மிட்செல் ஸ்டார்க்குடன் ஒப்பிட்டு பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், வளர்ந்து வரும் நட்சத்திர பந்து வீச்சாளர்களில் ஒருவராக அவர் உருவெடுப்பார் என்று ஆரூடம் சொல்லியிருக்கிறார். இதனால் ஆசிய போட்டியில் ஷஹீனின் பந்து வீச்சு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள ஷஹீன் அப்ரிடி, ஒரு நாள் போட்டிகளில் ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய போட்டிக்கான பாகிஸ்தான் அணி வருமாறு:- சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம், சோயிப் மாலிக், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷதப் கான், முகமது அமிர், ஹசன் அலி, ஜூனைத் கான், உஸ்மான் கான், ஷஹீன் அப்ரிடி.

மேலும் செய்திகள்