இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்: சென்னையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்று சென்னையில் நவம்பர் மாதம் நடக்கிறது.

Update: 2018-09-04 23:00 GMT
மும்பை,

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (செப்.15-28) பங்கேற்கிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டிலும் (அக்.4-8), 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்திலும் (அக்.12-16) நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் முறையே கவுகாத்தி (அக்.21), இந்தூர் (அக்.24), புனே (அக்.27), மும்பை (அக்.29), திருவனந்தபுரம் (நவ.1) ஆகிய நகரங்களிலும், 20 ஓவர் போட்டிகள் கொல்கத்தா (நவ.4), லக்னோ (நவ.6), சென்னை (நவ.11) ஆகிய இடங்களிலும் நடத்தப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 20 ஓவர் போட்டி நடத்தப்படுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் இங்கு நடந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

மேலும் செய்திகள்