பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர்

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12-வது சீசனில் இந்திய அணியின் சர்ச்சைக்குரிய முன்னாள் வீரர் ஒருவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2018-09-06 05:39 GMT
மும்பை

கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த், 2005ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த்திற்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஆட வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. அதன்பிறகு அதிலிருந்து மீண்டு மீண்டும் இந்திய அணியில் ஆட அவர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஸ்ரீசாந்த், ஜாரீர் கான் நடித்த அக்சர்-2 என்ற பாலிவுட் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

நடிப்பு ஒருபுறமிருக்க, பாஜகவில் இணைந்த ஸ்ரீசாந்த், 2016-ல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவ்வாறு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு சினிமா, அரசியல் என பலதுறைகளில் காலடி பதித்த ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். வரும் 16-ம் தேதி தொடங்கும் 12-வது இந்தி பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைத்துறை பிரபலங்களை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. தமிழில் இரண்டாவது சீசன் நடந்துவருகிறது.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12-வது சீசன் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஸ்ரீசாந்த் தான் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது, சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது போன்ற பரபரப்புகளுக்கு சொந்தக்காரர்.

மேலும் செய்திகள்