கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

லண்டன், 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது.  தொடர்ந்து 5-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தயக்கமின்றி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். துவக்கத்தில் நிதானமாக ஆடிய இங்கிலாந்து, முதல் நாளின் கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் (11 ரன்), அடில் ரஷித் (4 ரன்) களத்தில் இருந்தனர். . இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. 

இந்திய அணி, விரைவில் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியில் பட்லர், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சோதனை கொடுத்தார். ரஷித் 15 ரன்களில் ஆட்டமிழந்த போதும், பட்லர் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்களை சேர்த்தது. ஜோஸ் பட்லர் 63 ரன்களுடனும், பிராடு 36 ரன்களுடனும் களத்தில்  இருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு, மேற்கொண்டு 8 ரன்களை மட்டுமே சேர்த்த இங்கிலாந்து பிராடின் (38 ரன்கள்) விக்கெட்டை பறிகொடுத்தது. நிலைத்து நின்று ஆடிய பட்லர் 89 ரன்களில்  ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 122 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.