கிரிக்கெட்
கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 292 ரன்னில் ஆல்-அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி ஜடேஜா, விஹாரியின் அரைசதத்தின் உதவியுடன் சரிவில் இருந்து மீண்டு 292 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களுடன் பரிதவித்தது. புதுமுக வீரர் ஹனுமா விஹாரி (25 ரன்), ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (8 ரன்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். அவசரம் காட்டாமல் கவனமுடன் செயல்பட்ட விஹாரியும், ஜடேஜாவும் 1½ மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்ததுடன், ஸ்கோரையும் ஓரளவு உயர்த்தினர். அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய விஹாரி 56 ரன்களில் (124 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் (169 பந்து) சேர்த்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதன் பின்னர் ஜடேஜா பின்வரிசை வீரர்களின் துணையுடன் முடிந்த வரை அதிரடியாக ஆடினார். இஷாந்த் ஷர்மா 4 ரன்னிலும் (25 பந்து), முகமது ஷமி ஒரு ரன்னிலும் (5 பந்து) வெளியேறினர். கடைசி விக்கெட்டுக்கு இறங்கிய பும்ராவின் துணையுடன் ஜடேஜா 32 ரன்கள் திரட்டினார். ஆனால் ஒரு ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுக்க முயற்சித்த போது, எதிர்முனையில் நின்ற பும்ரா ரன்-அவுட் ஆனார். 14 பந்துகளை சந்தித்த பும்ரா ரன் ஏதும் எடுக்கவில்லை.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 95 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 9-வது அரைசதத்தை எட்டிய ஜடேஜா 86 ரன்களுடன் (156 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 40 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் 10 ரன்னிலும், அடுத்து வந்த மொயீன் அலி 20 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இதன் பின்னர் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் அலஸ்டயர் குக்கும், கேப்டன் ஜோ ரூட்டும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர நிறைவில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து மொத்தம் 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. தனது கடைசி இன்னிங்சில் ஆடும் அலஸ்டயர் குக் 46 ரன்களுடனும் (125 பந்து, 3 பவுண்டரி), ஜோ ரூட் 29 ரன்களுடனும் (43 பந்து, 5 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.