கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றி முனைப்பில் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

Update: 2018-09-10 23:30 GMT
லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 292 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின்னர் 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து இருந்தது. ஜென்னிங்ஸ் 10 ரன்னிலும், மொயீன் அலி 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அலஸ்டயர் குக் 46 ரன்களுடனும், ஜோ ரூட் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. அலஸ்டயர் குக், ஜோ ரூட் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்று நிதானமாகவும், நேர்த்தியாகவும் அடித்து ஆடினார்கள். இந்திய பந்து வீச்சாளர்களால் அவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்க முடியவில்லை. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா பந்து வீச முடியாமல் போனது இந்திய அணிக்கு சிறிய பின்னடைவாக அமைந்தது.

நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலஸ்டயர் குக் 210 பந்துகளில் 8 பவுண்டரியுடன் சதத்தை எட்டினார். 161-வது டெஸ்டில் ஆடும் அலஸ்டயர் குக் அடித்த 33-வது டெஸ்ட் சதம் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 32 சதம் அடித்து இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக்கை பின்னுக்கு தள்ளிய குக் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 10-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் குக் அடித்த 7-வது சதம் இதுவாகும். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து இருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகும் இந்த இணையின் ஆதிக்கம் நீடித்தது. 94 ரன்னில் இருக்கையில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், புஜாரா ஆகிய இருவரும் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதால் தப்பி பிழைத்த கேப்டன் ஜோ ரூட் 151 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் தனது 14-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அணியின் ஸ்கோர் 321 ரன்களை எட்டிய போது நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி பிரிந்தது. கேப்டன் ஜோ ரூட் 190 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 125 ரன்கள் எடுத்த நிலையில் ஹனுமா விஹாரி பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் (147 ரன்கள், 286 பந்துகளில் 14 பவுண்டரியுடன்) விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு குக்-ஜோ ரூட் இணை 259 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. குக் ஆடும் கடைசி சர்வதேச போட்டி இது என்பதால் அவர் ஆட்டம் இழந்து பெலிலியன் திரும்பிய போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பரவசப்படுத்தினார்கள். அத்துடன் இந்தியா, இங்கிலாந்து வீரர்களும் கைதட்டியும், அவருடன் கைகுலுக்கியும் பிரியா விடை கொடுத்தனர்.

பின்னர் வந்த பேர்ஸ்டோ (18 ரன்கள்), ஜோஸ் பட்லர் (0) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தனர். தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை பெற்றது.

தேனீர் இடைவேளை முடிந்ததும் தொடர்ந்து ஆடிய பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும், சாம் குர்ரன் 21 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடில் ரஷித் 20 ரன்னுடன் ஆட்டம் இழக் காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 1 ரன்னிலும், புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். அடுத்த ஓவரில் விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 2 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது.

4-வது விக்கெட்டுக்கு ரஹானே, லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி மேலும் விக்கெட் சரியாமல் பார்த்து கொண்டனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 46 ரன்னுடனும், ரஹானே 10 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மெக்ராத்தின் (563 விக்கெட்டுகள்) சாதனையை சமன் செய்தார்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 406 ரன்கள் தேவைப்படுகிறது. அணியின் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. குக்கை வெற்றியுடன் அனுப்ப இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி தொடர்ந்து போராடும். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்