கிரிக்கெட்
பெர்த் டெஸ்ட்; இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயம்

பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது.
பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அற்புத சதத்தின் உதவியால், 283 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 

இதன்படி, 43 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில்,  48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. 

இந்த நிலையில்,  இன்று 4-வது நாள் ஆட்டம் துவங்கியது.  உஸ்மான் காவ்ஜா (72 ரன்கள்) டிம் பெய்ன் (37 ரன்கள்) ஆகியோர் சீரான இடை வெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவர்களில் 243 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இந்திய அணியில் அதிகபட்சமாக முகம்மது சமி 6 விக்கெட்டுகளை அள்ளினார். 

இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது. போட்டியில் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு உள்ளதால்,  இந்த டெஸ்ட் போட்டியும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்