உலக கோப்பைக்கான அணித்தேர்வில் ஐ.பி.எல். போட்டி கவனத்தில் கொள்ளப்படாது - இந்திய கேப்டன் கோலி பேட்டி

உலக கோப்பைக்கான அணித் தேர்வில் ஐ.பி.எல். போட்டி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

Update: 2019-03-01 23:15 GMT
ஐதராபாத்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நாம் ஐ.பி.எல். 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளோம். ஆனால் உலக கோப்பைக்கான அணித் தேர்வில் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நமக்கு நிலையான ஒரு அணி தேவை. ஐ.பி.எல்.-க்கு முன்பாகவே உலக கோப்பை போட்டிக்கு எந்த மாதிரியான அணி தேவை என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வீரர்களின் ஐ.பி.எல். செயல்பாட்டின் அடிப்படையில் உலக கோப்பை அணியில் மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சில வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் சரியாக ஆடவில்லை என்றால், அவர்களது பெயர் உலக கோப்பைக்கான அணித் தேர்வில் இருந்து ஓரங்கட்டப்படும் என்று அர்த்தம் கிடையாது. அதனால் இது ஒரு விஷயமே அல்ல.

சரியான கலவையில் அணி அமைவது குறித்து சிந்திக்க வேண்டி உள்ளது. குறிப்பாக பேட்டிங் வரிசையில் யார்-யார் இடம் பெற்றால் நேர்த்தியாக இருக்கும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் பந்து வீச்சு கூட்டணியில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாக தோன்றதில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை எங்களால் வெல்ல முடியவில்லை. ஏனெனில் முதலாவது ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 2-வது ஆட்டத்தில் எங்களை விட ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக ஆடினர். இதை நீங்கள் (நிருபர்கள்) புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணி முழு உத்வேகத்துடன் போராடவில்லை என்று வெளியில் இருந்து சொல்லலாம். ஆனால் நாங்கள் எப்போதும் போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றி பெறவே விரும்புகிறோம். வெறும் பரிசோதனை முயற்சியை மட்டுமே செய்கிறோம் என்றால், ஒவ்வொருவரும் சிக்சர் அடிக்க முற்பட்டு 50 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆக வேண்டியது தான். இவற்றை எல்லாம் நீங்கள் எதிர்மறையாக பார்த்தால், அவற்றில் இருந்து எதிர்மறை விஷயங்கள் மட்டுமே தென்படும். நேர்மறையாக நோக்கினால் தான் அதில் இருந்து நல்ல விஷயங்களை எடுக்க முடியும். இவ்வாறு கோலி கூறினார்.

உலக கோப்பைக்கான பரீட்சார்த்த முயற்சி செய்து கொண்டிருந்தால், இந்த தொடரை வெல்வது முக்கியம் அல்லவா? என்று ஒரு நிருபர் கேட்ட போது எரிச்சல் அடைந்த கோலி, ‘தொடரை வெல்வதற்காகத் தான் நாங்கள் ஆடுகிறோம். இல்லாவிட்டால் நான் பந்து ஸ்டம்பை தாக்கட்டும் என்று அடிக்காமல் விட்டு விடுவேனே’ என்று பதில் அளித்தார்.

அணிக்கு தேவை என்றால் பேட்டிங்கில் 4-வது வரிசையில் இறங்கி ஆடுவதில் மகிழ்ச்சி தான். 3-ல் இருந்து 4-வது வரிசைக்கு மாறினாலும் எனது ஆட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் கோலி குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்