தொடர் தோல்வி எதிரொலி: இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹதுருசின்காவை நீக்க முடிவு?

தொடர் தோல்வி எதிரொலியாக, இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹதுருசின்காவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-03-14 23:20 GMT
கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதால் அந்த அணியின் பயிற்சியாளர் ஹதுருசின்காவை நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அந்த அணி அடிமேல் அடி வாங்கி வருகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 4 ஒரு நாள் போட்டிகளிலும் அந்த அணி வரிசையாக படுதோல்வி அடைந்தது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் நாளை நடக்கிறது.

இந்த நிலையில் 5-வது ஒரு நாள் போட்டி முடிந்ததும் உடனடியாக தாயகம் திரும்பும்படி இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சன்டிகா ஹதுருசின்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான இலங்கை அணியின் பயிற்சியாளர் பணியை பீல்டிங் பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்சன் (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி கடைசியாக ஆடிய 14 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை போட்டி நெருங்கி வரும் வேளையில் இலங்கை அணியின் செயல்பாடு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தை மிகுந்த அதிருப்தி அடைய வைத்துள்ளது. உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்துவதில் எந்த மாதிரியான திட்டங்களை வைத்துள்ளார் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப ஆலோசனை நடத்துவதற்காக ஹதுருசின்கா வரவழைக்கப்படுவதாக கூறப்பட்டாலும், அவரை கழற்றி விடுவதற்கான வாய்ப்பே அதிகமாக தென்படுகிறது.

2020-ம் ஆண்டு வரை அவரது ஒப்பந்த காலம் இருக்கிறது. முன்னரே நீக்கினால், அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அது குறித்து அவரிடம் பேசப்பட இருப்பதாக தெரிகிறது.

50 வயதான ஹதுருசின்கா 2018-ம் ஆண்டு இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். இலங்கை முன்னாள் வீரரான ஹதுருசின்காவின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி 49 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 16-ல் மட்டும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ரிக்சனின் வழிகாட்டுதலில், 20 ஓவர் தொடரில் இலங்கை அணி நன்றாக செயல்படும்பட்சத்தில் புதிய பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்