கிரிக்கெட்
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 85 ரன்னில் சுருண்டது

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 85 ரன்னில் சுருண்டது.
லண்டன்,

சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பாக அண்டை நாடான அயர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.

4 நாள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

புற்கள் நிறைந்த இந்த ஆடுகளத்தை அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் மர்டாக் கச்சிதமாக பயன்படுத்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அவரது பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் (6 ரன்), அறிமுக வீரர் ஜாசன் ராய் (5 ரன்) இருவரும் வீழ்ந்தனர். கேப்டன் ஜோ ரூட் (2 ரன்) மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடேரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் மூன்று பேரும் ‘டக்-அவுட்’ ஆகி நடையை கட்டினர்.

வீழ்ச்சியின் பிடியில் இருந்து இங்கிலாந்து அணியால் நிமிரவே முடியவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 23.4 ஓவர்களில் 85 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ டென்லி 23 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மர்டாக் 9 ஓவர்களில் 2 மெய்டனுடன் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். லார்ட்ஸ் மைதான வரலாற்றில் ஒரு இன்னிங்சில் துரிதமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சிறப்பை 37 வயதான மர்டாக் பெற்றார். மார்க் அடேர் 3 விக்கெட்டுகளும், பாய்ட் ராங்கின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

உள்நாட்டில் இங்கிலாந்து அணி குறைந்த ஓவர்களில் (23.4 ஓவர்) அடங்கிப் போன இன்னிங்ஸ் இது தான். இதற்கு முன்பு 1995-ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் 30 ஓவர்களில் (89 ரன்) ஆல்-அவுட் ஆனதே இங்கிலாந்தின் மோசமான சீர்குலைவாக இருந்தது.

2017-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து அணி விளையாடும் 3-வது டெஸ்ட் போட்டி இதுவாகும். கத்துக்குட்டி அணியிடம் இங்கிலாந்து வீரர்கள் ஆடிய விதம் உள்ளூர் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

அடுத்து அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 50 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 82 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆன்டி பால்பிர்னி (55 ரன், 69 பந்து, 10 பவுண்டரி) அரைசதம் அடித்தார்.

2-வது நாளான இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும். சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.