டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Update: 2019-09-16 23:48 GMT
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (937 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஷஸ் போட்டி தொடருக்கு முன்பு 4-வது இடத்தில் இருந்த ஸ்டீவன் சுமித் ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து அசத்தியதன் மூலம் விராட்கோலியை ஏற்கனவே பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்ததுடன் புள்ளி வித்தியாசத்தையும் அதிகரித்துள்ளார். 34 புள்ளிகள் பின்தங்கி இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (903 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இந்திய வீரர் புஜாரா (825 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் (749 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் (731 புள்ளிகள்) 6-வது இடத்திலும், இந்திய வீரர் ரஹானே (725 புள்ளிகள்) 7-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (724 புள்ளிகள்) 8-வது இடத்திலும், இலங்கை அணி வீரர் கருணாரத்னே (723 புள்ளிகள்) 9-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் (719 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர்.

ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் 32 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 7 இடங்கள் சரிந்து 24-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஷஸ் தொடரில் 10 இன்னிங்சில் விளையாடி 95 ரன்கள் மட்டுமே எடுத்த டேவிட் வார்னர் இந்த தொடருக்கு முன்பு 5-வது இடத்தில் இருந்தார். இந்த தொடரில் மட்டும் அவர் 19 இடங்கள் பின்தங்கி இருக்கிறார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (908 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். தென்ஆப்பிரிக்க வீரர் காஜிசோ ரபடா (851 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (835 புள்ளிகள்) 3-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (814 புள்ளிகள்) 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (813 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (798 புள்ளிகள்) 6-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (795 புள்ளிகள்) 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர். நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர் (785 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெமார் ரோச் (780 புள்ளிகள்), பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ் (770 புள்ளிகள்) ஆகியோர் முன்னேற்றம் கண்டு முறையே 8-வது, 9-வது, 10-வது இடத்தை பிடித்துள்ளனர். இந்திய பவுலர்கள் ரவீந்திர ஜடேஜா 11-வது இடத்தையும், ஆர்.அஸ்வின் 14-வது இடத்தையும், முகமது ஷமி 18-வது இடத்தையும், இஷாந்த் ஷர்மா 20-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (472 புள்ளிகள்) முதலிடத்திலும், வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (397 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (389 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (387 புள்ளிகள்) 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (326 புள்ளிகள்) 5-வது இடத்தில் நீடிக்கின்றனர். இந்திய வீரர் ஆர்.அஸ்வின் (308 புள்ளிகள்) 6-வது இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள்