டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார்.

Update: 2019-12-16 23:39 GMT
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (928 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 43 மற்றும் 16 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளிகள்) 12 புள்ளிகளை இழந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்டீவன் சுமித்தை விட விராட்கோலி 17 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (864 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்கள் புஜாரா (791 புள்ளிகள்) 4-வது இடத்திலும், ரஹானே (759 புள்ளிகள்) 6-வது இடத்திலும் தொடருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 143 மற்றும் 50 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி வீரர் லபுஸ்சேன் (786 புள்ளிகள்) 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (755 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோரூட் (752 புள்ளிகள்) முறையே 7-வது, 8-வது இடத்தை பெற்றுள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (728 புள்ளிகள்) 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் முதல்முறையாக ‘டாப்-10’ இடத்துக்குள் வந்துள்ளார். இலங்கை வீரர் கருணாரத்னே (725 புள்ளிகள்) 10-வது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் அறிமுக போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற பாகிஸ்தான் வீரர் அபித் அலி 78-வது இடத்தை பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் (898 புள்ளிகள்) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா (839 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர் (834 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் 3-வது இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (830 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 4-வது இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (806 புள்ளிகள்) முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (794 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (785 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (783 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (782 புள்ளிகள்) முறையே 8-வது, 9-வது இடம் வகிக்கின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் சாய்த்த நியூசிலாந்து வீரர் டிம் சவுதி (780 புள்ளிகள்) 10-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (473 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (406 புள்ளிகள்) 2-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி (112 புள்ளிகள்) 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணி (102 புள்ளிகள்) 3-வது இடத்திலும் தொடருகின்றன.

மேலும் செய்திகள்