கால்பந்து
மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த பெண் நடுவர் தேர்வு

மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த யுவேனா பெர்ணான்டஸ் உதவி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிபா 20 வயதுக்கு உட்பட்டோர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெறவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 5 முதல் 24-ஆம் தேதி வரை இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த யுவேனா பெர்ணான்டஸ் உதவி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யுவேனா ஏற்கெனவே கடந்த 2016-ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் உதவி நடுவராக பணிபுரிந்தவர். அதில் 4 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டியில் யுவேனா பணிபுரிந்தார். மேலும் நடுவர் குழுவின் சிறப்பு விருதையும் அவர் பெற்றார்.

தற்போது இரண்டாவது முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து யுவேனா, "தற்போது இரண்டாவது முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இது எனக்கு மட்டும் ஊக்கத்தை தரவில்லை. மகளிர் கால்பந்துக்கு புதிய உத்வேகத்தை தரும். இந்திய நடுவர்கள் பெரிய போட்டிகளிலும் பணிபுரிய தகுதியானவர்கள் என்பதை உணர்த்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.