கால்பந்து
உலக கோப்பை போட்டிக்கான ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கம்

உலக கோப்பை போட்டிக்கான ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கப்பட்டுள்ளார்.
பெர்லின்,

முந்தைய உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஹீரோவான கோட்சேவுக்கு தற்போதைய ஜெர்மனி அணியில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.

32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ நேற்று வெளியிட்டார்.

ஜெர்மனி அணி 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர் 25 வயதான மரியோ கோட்சே இந்த உலக கோப்பைக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவர் போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்தார்.

அதே சமயம் செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு திரும்பிய கோல் கீப்பரும், கேப்டனுமான மானுல் நியர் உத்தேச அணியில் 4 கோல் கீப்பர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். ஆனால் பயிற்சி முகாமில் அவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதி கட்ட அணியில் நீடிப்பார். தாமஸ் முல்லர், மேட்ஸ் ஹம்மல்ஸ், மரியோ கோம்ஸ், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

இதற்கிடையே ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் ஒப்பந்த காலம் 2020-ம் ஆண்டில் இருந்து மேலும் இரண்டு ஆண்டுக்கு (2022-ம் ஆண்டு வரை) நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

போர்ச்சுகலின் முதற்கட்ட அணியில் பேபியோ கோயன்ட்ராவ், ரெனட்டோ சாஞ்சஸ் ஆகியோருக்கு இடம் இல்லை. அதே சமயம் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நானி, பெப்பெ, வில்லியம் கர்வல்ஹோ, ஜோவ் மவ்டினோ உள்ளிட்டோர் அணியில் தொடருகிறார்கள்.

இதே போல் அர்ஜென்டினாவின் உத்தேச அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா போன்ற முன்னணி வீரர்கள் இடத்தை தக்கவைத்து இருக்கிறார்கள்.

5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் நம்பிக்கை வீரர் 26 வயதான நெய்மார் அந்த அணிக்கு திரும்பியுள்ளார். கால்முட்டி காயத்தால் விலகிய மூத்த வீரர் டேனி ஆல்வ்சுக்கு பதிலாக டேனிலோ சேர்க்கப்பட்டு இருக்கிறார்.