கால்பந்து
21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக பாகிஸ்தானில் தயாராகும் கால்பந்துகள்

21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பந்துகள் பாகிஸ்தானில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதியான சியால்கோட்டில் தயாரிக்கப்படுகின்றன.

ரஷ்யாவில் உலகக் கோப்பை  கால்பந்து தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக உலகளவில் உள்ள அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த உலகக் கோப்பை  போட்டியில் பயன்படுத்தப்படும் அடிடாஸ் டெல்ஸ்டர் 18 (Adidas Telstar 18 )என்று பெயரிடப்பட்டுள்ள பிரத்யேக கால்பந்து பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கால்பந்து, தொலைக்காட்சியில் பார்க்கும்போது எங்கு உள்ளது என்பதை தெளிவாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்த பந்தில் சிப் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பந்து எங்கு உள்ளது என்பதை கைப்பேசியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். 

டெல்ஸ்டர் என்பது தகவல் ஒலிபரப்புக்காக நாசா அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் ஆகும். அதன் நினைவாகவே இந்த பெயர் கால்பந்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1970ஆம் ஆண்டிலிருந்து கால்பந்துகளை தயாரித்து வரும் அடிடாஸ் நிறுவனம், கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு தயாரித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவு கால்பந்து பாகிஸ்தானில் தான் தயாராகிறது. பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் ஆண்டுக்கு 3 கோடி பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது உலக அளவில் தயாரிக்கப்படும் பந்துகளில் 40 சதவிதம் ஆகும். இந்நிலையில், பல சிறப்பு அம்சங்களை கொண்ட 2018 தொடருக்கான கால்பந்தும் பாகிஸ்தானில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள சியால்கோட் நகரில் பார்வேர்டு ஸ்போர்ட்ஸ்  என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் கால்பந்துகளை அடிடாஸ்  நிறுவனத்திற்காக பிரத்யேகமாக தயாரித்துள்ளது. இந்த உலகக் கோப்பை  தொடருக்கு எத்தனை பந்துகள் தயாராகின்றன என்பது தெரியாத நிலையில், மாதத்துக்கு 7 லட்சம் கால்பந்துகளை பார்வேர்டு ஸ்போர்ட்ஸ்  நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த 1990 முதல் 2010 வரை நடந்த உலகக் கிண்ண தொடர்களுக்கு, கைகளால் தைக்கப்படும் கால்பந்துகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 2014ஆம் ஆண்டு ஒரு மாற்றமாக தெர்மோ முறையில் சூடேற்றப்பட்டு ஒட்ட வைக்கப்பட்ட கால்பந்துகளே பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தொடரிலும் இந்த வகை கால்பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளன. சியால்கோட் நகரில் ஆண்டுக்கு 3 கோடி பந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.