கால்பந்து
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் அணி 13–வது முறையாக சாம்பியன்

கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)– லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் உக்ரைனின் கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு சந்தித்தன.
கீவ், இந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)– லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் உக்ரைனின் கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் ரியல்மாட்ரிட் வசமே (66 சதவீதம்) பந்து அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.ஆட்டத்தின் 51–வது நிமிடத்தில் லிவர்பூல் கோல் கீப்பர் லோரிஸ் கரியஸ் செய்த தவறு, எதிரணிக்கு சாதகமாக மாறியது. அதாவது கோல் பகுதியில் வைத்து அவர் தூக்கி எறிந்த பந்து, மாட்ரிட் வீரர் கரிம் பெஞ்சிமா கால் மீது பட்டு கோல் வலைக்குள் சென்றது. இதையடுத்து 55–வது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் சாடியோ மான் பதில் கோல் திருப்பினார். இதன் பிறகு 64–வது நிமிடத்தில் அந்தரத்தில் பல்டி அடித்து ‘பைசைக்கிள்’ கிக் மூலம் கோல் போட்டு முன்னிலை ஏற்படுத்தி தந்த மாட்ரிட் வீரர் காரெத் பாலே 83–வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை திணித்தார். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3–1 என்ற கோல் கணக்கில் ரிவர்பூல் அணியை தோற்கடித்து 13–வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றியது. வேறு எந்த அணியும் 7 முறைக்கு மேல் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதில்லை. இதில் கடைசி மூன்று முறையும் (ஹாட்ரிக்) ரியல் மாட்ரிட் அணியே வாகை சூடியிருக்கிறது. இந்த கோப்பையை தொடர்ந்து 3 முறை பெற்றுத் தந்த பயிற்சியாளர் என்ற பெருமை ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் ஜிடேனுக்கு கிடைத்துள்ளது.இதற்கிடையே ரியல்மாட்ரிட் நட்சத்திர வீரர் போர்ச்சுகலை சேர்ந்த 33 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ, இந்த கிளப்பை விட்டு வெளியேற விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அவர், ‘இந்த கிளப்பில் நீடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. அடுத்த சில நாட்களில் எனது முடிவை தெரிவிப்பேன்’ என்றார்.