கால்பந்து
8-வது உலக கோப்பை 1966 (சாம்பியன் இங்கிலாந்து)

8-வது உலக கோப்பை 1966 (சாம்பியன் இங்கிலாந்து), நடத்திய நாடு-இங்கிலாந்து, இதில் 16 அணிகள் பங்கேற்றன.
இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி, கால்பந்து ஆட்டத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தில் நடைபெற்றது. மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி போட்டியை நடத்தும் உரிமையை இங்கிலாந்து பெற்றது. ஆப்பிரிக்க கண்டத்தில் பிளே-ஆப் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் 3 அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியாது. ஆசிய கண்டத்தில் வெற்றி பெறும் அணிகளுடன் ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதி வெற்றி பெற்றால் தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்பிரிக்க நாடுகள் இந்த போட்டியை புறக்கணித்தன. இருப்பினும் இந்த போட்டிக்கான தகுதி சுற்றில் 70 நாடுகள் கலந்து கொண்டன. போர்ச்சுகல், வடகொரியா அணிகள் முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் அடியெடுத்து வைத்தன. செக்கோஸ்லோவக்கியா, யூகோஸ்லாவியா ஆகிய அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ளாத அணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

பிரதான சுற்றுக்கு தகுதி பெற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு (கால்இறுதி) தகுதி கண்டன. இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2 முறை சாம்பியனான பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி கண்டு லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. பிரேசில் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பல்கேரியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் பீலே, மானுவேல் பிரான்சிஸ்கோ (காரின்சா) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஹங்கேரிக்கு எதிரான 2-வது லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக பீலே களம் காணவில்லை. கடைசி லீக் ஆட்டத்தில் பீலே ஆடினாலும் பிரேசில் அணி 1-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியிடம் வீழ்ந்தது. அத்துடன் பிரேசில் அணியின் கால்இறுதி கனவும் கலைந்து போனது.

உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் களம் கண்ட இங்கிலாந்து அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 0-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயுடன் டிரா கண்டாலும், அந்த அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் பட்டையை கிளப்பி விசுவரூபம் எடுத்தது. அடுத்த லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவையும், 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியையும் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், கால்இறுதிக்கும் முன்னேறியது. லீக் ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து, உருகுவே, மேற்கு ஜெர்மனி, அர்ஜென்டினா, போர்ச்சுகல், ஹங்கேரி, சோவியத் யூனியன், வடகொரியா ஆகிய அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன.

இங்கிலாந்து அணி, கால் இறுதியில் அர்ஜென்டினாவையும் (1-0), அரைஇறுதியில் போர்ச்சுகல் அணியையும் (2-1) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஜூலை 30-ந் தேதி லண்டன் வெம்பிலே ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-மேற்கு ஜெர்மனி அணிகள் மகுடத்துக்காக மல்லுக்கட்டின. வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை வகித்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 18-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த இங்கிலாந்து அணி வீரர் சார்லஸ் ஹர்ஸ்ட் (101-வது மற்றும் 120-வது நிமிடங்களில்) கூடுதல் நேரத்தில் 2 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை சாய்த்து முதல்முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. இங்கிலாந்து வீரர் சார்லஸ் ஹர்ஸ்ட் அடித்த 2-வது கோல் சர்ச்சைக்கு உள்ளானது. உலக கோப்பையை நடத்தும் நாடு கோப்பையை வெல்வது இது 3-வது நிகழ்வாகும்.

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சோவியத் யூனியனை வீழ்த்தி 3-வது இடத்தை தனதாக்கியது. இந்த போட்டி தொடரில் கடந்த போட்டியை போல் 89 கோல்கள் (32 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன. 9 கோல்கள் அடித்த போர்ச்சுகல் அணி வீரர் இசெபியோ சில்வா பெரீரா தங்க ஷூவை தட்டிச் சென்றார். முதல் முறையாக இந்த உலக கோப்பை போட்டி தொடரில் போட்டி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டி சின்னமாக சிங்கம் அறிவிக்கப்பட்டு அதற்கு வில்லி என்று பெயர் சூட்டப்பட்டது. முந்தைய போட்டிகளை விட இந்த போட்டி தொடரை காண வந்த ரசிகர்களின் சராசரி எண்ணிக்கை அதிகமாகும். கருப்பு, வெள்ளையில் ஒளிபரப்பப்பட்ட கடைசி உலக கோப்பை போட்டி தொடர் இதுவாகும்.