கால்பந்து
4–வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார்: ஆஸ்திரேலிய கால்பந்து அணியில் டிம் காஹில்லுக்கு இடம்

21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14–ந்தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 23 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சிட்னி, 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14–ந்தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 23 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மூத்த வீரர் 38 வயதான டிம் காஹில் இடம் பிடித்துள்ளார். அவர் விளையாடப்போகும் 4–வது உலக கோப்பை தொடர் இதுவாகும். ஆஸ்திரேலிய அணிக்காக 105 போட்டிகளில் விளையாடி இருக்கும் டிம் காஹில் சமீப காலமாக பெரிய அளவில் பார்மில் இல்லை. ஆனாலும் பயிற்சியாளர் பெர்ட் வான் மார்விஜ்க் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கியுள்ளார்.அவருடன் நடுகள வீரர் 32 வயதான மார்க் மில்லிகனும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவருக்கும் இது 4–வது உலக கோப்பை என்றாலும் 2006–ம் ஆண்டு தொடரில் அவர் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.