13–வது உலக கோப்பை 1986 (சாம்பியன்– அர்ஜென்டினா)

இந்த உலக கோப்பையை நடத்தும் உரிமம் முதலில் கொலம்பியா நாட்டிற்கே கிடைத்தது.

Update: 2018-06-03 21:30 GMT

நடத்திய நாடு–மெக்சிகோ, பங்கேற்ற அணிகள்–24

ந்த உலக கோப்பையை நடத்தும் உரிமம் முதலில் கொலம்பியா நாட்டிற்கே கிடைத்தது. ஆனால் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவை நடத்துவதற்கு செலவினம் அதிகமாகும் என்பதால் கொலம்பியா நிதி நெருக்கடியை காரணம் காட்டி சில ஆண்டுகளுக்கு பிறகு பின்வாங்கியது. அதனால் இந்த வாய்ப்பு மெக்சிகோவுக்கு வழங்கப்பட்டது. உலக கோப்பை போட்டியை 2–வது முறையாக (ஏற்கனவே 1970–ல் நடத்தியது) நடத்திய முதல் தேசம் என்ற பெருமையை மெக்சிகோ பெற்றது.

களம் கண்ட 24 அணிகளில் டென்மார்க், கனடா, ஈராக் ஆகிய ‘கன்னி’ அணிகளும் அடங்கும். அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3–வது இடத்தை பிடித்த சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்–அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

லீக் சுற்றில் தாக்குதல் பாணியை கடைபிடித்த அறிமுக அணியான டென்மார்க் தனது பிரிவில் மூன்று அணிகளையும் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது. இதில் முன்னாள் சாம்பியன் மேற்கு ஜெர்மனியை 2–0 என்ற கோல் கணக்கில் போட்டுத் தாக்கியதும் அடங்கும். இதே போல் மொராக்கோ ‘எப்’ பிரிவில் போர்ச்சுகலுக்கு (3–1) அதிர்ச்சி அளித்ததுடன் மேலும் 2 ஆட்டங்களில் டிரா செய்து நாக்–அவுட் சுற்றை எட்டியது. 2–வது சுற்றுக்குள் நுழைந்த முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோ தான்.

இருப்பினும் புதுமுக அணிகளின் வேகம் அடுத்த ரவுண்டான நாக்–அவுட் சுற்றுடன் அடங்கிப் போனது. ஸ்பெயின் 5–1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கையும், மேற்கு ஜெர்மனி 1–0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவையும் வெளியேற்றியது. முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, பெனால்டி ஷூட்–அவுட்டில் 3–4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் வீழ்ந்தது.

நாக்–அவுட், கால்இறுதி முடிவில் அர்ஜென்டினா, மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் அரைஇறுதியை உறுதி செய்தன. அரைஇறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா 2–0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், மேற்கு ஜெர்மனி 2–0 என்ற கோல் கணக்கில் பிரான்சையும் ஊதித்தள்ளியது.

இதையடுத்து மெக்சிகோ சிட்டி நகரில் ஜூன் 29–ந்தேதி, ஒரு லட்சத்திற்கும் மேல் குழுமியிருந்த ரசிகர்களின் முன்னிலையில் அர்ஜென்டினா– மேற்கு ஜெர்மனி அணிகள் இறுதி சுற்றில் மல்லுகட்டின. இதில் ஒரு கட்டத்தில் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை இருந்த நிலையில் 83–வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜார்ஜ் புருச்சாகா, வெற்றி கோலை போட்டார். இதன் மூலம் 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து 2–வது முறையாக அர்ஜென்டினா உலக சாம்பியன் கிரீடத்தை ஏந்தியது. அதே சமயம் தொடர்ந்து 2–வது முறையாக மேற்கு ஜெர்மனி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்த உலக கோப்பையை பொறுத்தவரை கதாநாயகனாக ஜொலித்தவர், 25 வயதான அர்ஜென்டினா கேப்டன் டியாகோ மரடோனா தான். போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய அவரது பங்களிப்பு அர்ஜென்டினா அணி மகுடம் சூடியதில் அளப்பரியது என்றால் மிகையல்ல. 5 கோல்கள் அடித்த அவர், 5 கோல்கள் சக வீரர்கள் அடிப்பதற்கு உதவிகரமாகவும் இருந்தார். அவருக்கு தங்க பந்து விருது கிடைத்தது. மொத்தம் 6 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர் கேரி லினெகர் தங்க ஷூ விருதை பெற்றார்.

மைதானத்தில் ரசிகர்கள் ஒவ்வொரு பகுதியாக ஒரு சேர எழுந்து நின்று கையை அலைபோல அசைக்கும் ‘மெக்சிகன் வேவ்’ முறை இந்த உலக கோப்பையில் இருந்து பிரபலமானது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மொத்தம் நடந்த 52 ஆட்டங்களில் 132 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்த உலக கோப்பை தொடங்குவதற்கு 8 மாதங்களுக்கு முன்பு மெக்சிகோவில் பூகம்பம் ஏற்பட்டு 20 ஆயிரம் பேர் மாண்டனர். ஆனாலும் ஸ்டேடியங்களுக்கு பாதிப்பு இல்லாததால் திட்டமிட்டப்படி மெக்சிகோ போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

‘கடவுளின் கை’

களத்தில் தனது துடிப்பான ஆட்டத்தால் ரசிகர்களை வசீகரப்படுத்திய அர்ஜென்டினா கேப்டன் மரடோனா புதுவிதமான சர்ச்சையில் சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான கால்இறுதியில் அர்ஜென்டினா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியின் இரண்டு கோல்களையும் மரடோனாவே போட்டார். இதில் முதலாவது கோலை 51–வது நிமிடத்தில் மரடோனா கையை பயன்படுத்தி அடித்தார். அதாவது இங்கிலாந்தின் கோல்பகுதியில் வைத்து துள்ளிகுதித்து பந்தை தலையால் முட்ட முயற்சித்த மரடோனா கண்இமைக்கும் நேரத்தில் பந்தை கையால் வலைக்குள் தள்ளினார். இதை கவனிக்காமல் கோல் என்று அறிவித்த நடுவர், இங்கிலாந்து வீரர்களின் முறையீட்டுக்கு செவிசாய்க்கவில்லை. பிறகு இது பற்றி மரடோனாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘அது கடவுளின் கையால் கிடைத்த கோல்’ என்று நக்கலாக பதில் அளித்து நழுவினார். அது முதல் அந்த கோலுக்கு கடவுளின் கை என்று பெயர். சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்திய வாக்கெடுப்பில் ரசிகர்களின் மூலம் நூற்றாண்டின் சிறந்த கோலாக அது தேர்வு செய்யப்பட்ட அதிசயம் பிற்காலத்தில் நடந்தது.

மேலும் செய்திகள்