15–வது உலக கோப்பை (சாம்பியன் பிரேசில்)

முதல் முறையாக அமெரிக்காவுக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிட்டியது.

Update: 2018-06-05 21:30 GMT

நடத்திய நாடு–அமெரிக்கா, பங்கேற்ற அணிகள்–24

முதல் முறையாக அமெரிக்காவுக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிட்டியது. உலக கோப்பையில் கால்பதிக்கும் கனவு கிரீஸ், நைஜீரியா, சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு இந்த போட்டியின் மூலம் நனவானது. சோவியத் யூனியன் சிதறிய பிறகு தனிநாடாக ரஷியா பங்கேற்ற முதல் உலக கோப்பை இது தான். இதே போல் மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி ஒரே நாடாக இணைந்து 1938–ம் ஆண்டுக்கு பிறகு ஒரே ஜெர்மனியாக இந்த உலக கோப்பையை சந்தித்தது. அதே சமயம் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து, உருகுவே, ஐரோப்பிய சாம்பியன் டென்மார்க், ஹங்கேரி, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற முன்னணி அணிகளுக்கு தகுதி சுற்று காலை வாரியது.

வெற்றி பெறும் அணிகளுக்கு 2 புள்ளிக்கு பதிலாக 3 புள்ளி வழங்கும் முறை இந்த உலக கோப்பையில் அறிமுகம் ஆனது.

பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் டாப்–2 இடத்தை பிடித்த 12 அணிகள், 3–வது இடத்தை பெற்ற சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்–அவுட் சுற்றுக்கு முன்னேறின.

இதில் எதிர்பார்த்தது போலவே பிரேசில் அணி 4–வது முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்து, அதிக முறை உலக கோப்பையை வசப்படுத்திய அணி என்ற சாதனையை படைத்தது. துங்கா தலைமையிலான பிரேசில் அணி லீக் சுற்றில் ரஷியா (2–0 என்ற கோல் கணக்கில்), கேமரூனை (3–0) தோற்கடித்தும், சுவீடனுடன் (1–1) டிரா செய்தும் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. இதன் பின்னர் 2–வது சுற்றில் அமெரிக்காவையும் (1–0), கால்இறுதியில் நெதர்லாந்தையும் (3–2), அரைஇறுதியில் சுவீடனையும் (1–0) போட்டுத்தாக்கிய பிரேசில் அணி இறுதி சுற்றுக்கு வந்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பிரேசில்–இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வழக்கமான நேரத்திலும், கூடுதல் நேரத்திலும் இரண்டு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்காதது குழுமியிருந்த 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கடுப்பேற்றியது.

இதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கொண்டு வரப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்ட முதல் உலக கோப்பை இது தான். பெனால்டி ஷூட்–அவுட்டில் பிரேசில் அணி 3–2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

இந்த போட்டிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரேசிலை சேர்ந்த மூன்று முறை பார்முலா1 கார்பந்தய சாம்பியன் பட்டத்தை வென்றவரான அயர்டான் சென்னா விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு உலக கோப்பையை பிரேசில் அணி அர்ப்பணித்தது.

இந்த உலக கோப்பையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு அணி பல்கேரியா தான். முந்தைய 5 உலக கோப்பை போட்டிகளில் ஒரு வெற்றியும் பெறாத பல்கேரியா, இந்த உலக கோப்பையில் வியப்புக்குரிய வகையில் விளையாடியது. லீக் சுற்றில் கிரீஸ் (4–0), அர்ஜென்டினாவுக்கு (2–0) எதிராக வெற்றியும், நைஜீரியாவிடம் (0–3) தோல்வியும் அடைந்தது. அதைத் தொடர்ந்து 2–வது சுற்றில் மெக்சிகோவுக்கும் (பெனால்டி ஷூட்–அவுட்டில் 3–1), கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கும் (2–1) அதிர்ச்சி அளித்த பல்கேரியாவின் அதிரடிவேட்டை அரைஇறுதியில் இத்தாலியிடம் (1–2) தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா உடல் எடையை குறைக்க ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் உலக கோப்பை போட்டியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது உலக கோப்பை பயணம் சர்ச்சையுடன் நிறைவு பெற்றது. அர்ஜென்டினாவும் 2–வது சுற்றுடன் மூட்டையை கட்டியது.

கேமரூன் அணிக்கு எதிரான லீக்கில் ரஷிய வீரர் ஒலக் சலேன்கோ அடுத்தடுத்து 5 கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார். ஒரு உலக கோப்பை ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அந்த சாதனை இன்றளவும் நீடிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மொத்தம் 9 நகரங்களில் நடந்த 52 ஆட்டங்களை 35 லட்சத்து 87 ஆயிரத்து 538 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். சராசரியாக ஒரு ஆட்டத்தை 69 ஆயிரம் பேர் பார்த்தனர். அதிக ரசிகர் பட்டாளம் நேரில் ரசித்த உலக கோப்பை போட்டித் தொடர் இது தான். அடுத்து வந்த உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்த்தப்பட்ட போதிலும், ரசிகர்களின் வருகை இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இல்லை. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற உலக கோப்பை போட்டியாகவும் இது அமைந்தது.

தலா 6 கோல்கள் அடித்த ஹிரிஸ்டோ ஸ்டோச்கோவ் (பல்கேரியா), ஒலக் சலேன்கோ (ரஷியா) ஆகியோர் தங்க ஷூவை பகிர்ந்து கொண்டனர்.

உயிரை பறித்த சுயகோல்

இந்த உலக கோப்பையில் மொத்தம் 141 கோல்கள் பதிவாகின. இதில் ஒன்று சுய கோல் (ஓன் கோல்). அந்த சுய கோலை அடித்தவர் கொலம்பியாவின் தடுப்பாட்டக்காரர் ஆண்ட்ரஸ் எஸ்கோபார். அமெரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றில், எதிரணி வீரர் அடித்த ஷாட்டை தடுக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக பந்து அவர் மீது பட்டு சுயகோலாக மாறியது. இதன் மூலம் அமெரிக்கா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

இந்த சுயகோல் அடுத்த சில தினங்களில் தனது உயிரை குடித்துவிடும் என்று அவர் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார். தாயகம் திரும்பிய எஸ்கோபார் பூங்காவில் நின்று கொண்டு இருந்த போது அவரிடம், சுயகோல் போட்டது குறித்து வாக்குவாதம் செய்த மூன்று பேர் பிறகு ஆத்திரத்தில் அவரை சுட்டுகொன்று விட்டனர். அவரது மரணம் கால்பந்து உலகை உலுக்கியது. அப்போது அவரது வயது 27. களத்தில் சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் நிதானமாக செயல்படக்கூடியவர் எஸ்கோபார். அதனால் அவரை ‘ஜென்டில்மேன்’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இளம் வயதிலேயே அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்து போனாலும் அவர் மீது ரசிகர்கள் இன்னும் நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டு அரசும் அவருக்கு சிலை நிறுவி கவுரவித்துள்ளது.

மேலும் செய்திகள்