இஸ்ரேல் கால்பந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது அர்ஜென்டினா

21–வது உலக கோப்பை கால்பந்து திருவிழா வருகிற 14–ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது.

Update: 2018-06-06 20:45 GMT

பியூனஸ் அயர்ஸ்,

21–வது உலக கோப்பை கால்பந்து திருவிழா வருகிற 14–ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் இஸ்ரேல் அணியுடன் மோத இருந்தது. இந்த ஆட்டம் இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் நகரில் வருகிற 9–ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. காசா பிரச்சினை காரணமாக இஸ்ரேல்–பாலஸ்தீன நாடுகள் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அர்ஜென்டினா அணி, இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் சென்று விளையாடக்கூடாது என்று பாலஸ்தீனம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வீரர்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை எழுந்தது. இந்த நிலையில் அர்ஜென்டினா அணி, இஸ்ரேல் சென்று அந்த அணியுடன் விளையாட இருந்த பயிற்சி ஆட்டத்தை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் ரத்து செய்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அர்ஜென்டினா அணியின் இஸ்ரேல் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரியை டெலிபோனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அர்ஜென்டினா அணியின் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கு பாலஸ்தீன கால்பந்து சம்மேளனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் அழுத்தம் காரணமாகவே அர்ஜென்டினா அணி, தனது இஸ்ரேல் பயணத்தை ரத்து செய்து இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்