18–வது உலக கோப்பை 2006 (சாம்பியன்–இத்தாலி)

இந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது.

Update: 2018-06-08 21:30 GMT

நடத்திய நாடு–ஜெர்மனி, பங்கேற்ற அணிகள்–32

ந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது. ஜெர்மனியில் உலக கோப்பை போட்டி அரங்கேறியது இது 2–வது முறையாகும்.

போட்டியை நடத்திய ஜெர்மனியை தவிர்த்து மற்ற 31 இடங்களுக்கு 198 அணிகள் தகுதி சுற்றில் விளையாடின. அங்கோலா, ஐவரிகோஸ்ட், செக்குடியரசு, கானா, டோகோ, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, உக்ரைன், செர்பியா ஆகிய அணிகள் முதல் முறையாக உலக கோப்பையில் அடியெடுத்து வைத்தன. ஆஸ்திரேலியா 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தகுதி பெற்றது.

பங்கேற்ற அணிகள் வழக்கம் போல் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. மறுபடியும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசிலின் வீறுநடை கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது. அந்த அணி கால்இறுதியில் 0–1 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. 57–வது நிமிடத்தில் தியரி ஹென்றி அடித்த ஒரே கோல், பிரேசிலை வெளியேற்றியது. முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் கால்இறுதியுடன் மூட்டையை கட்டியது.

போட்டியை நடத்திய ஜெர்மனி அணி அரைஇறுதியில் 0–2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோற்றது. இன்னொரு அரைஇறுதியில் பிரான்ஸ், கேப்டன் ஜிடேன் பெனால்டி வாய்ப்பில் அடித்த கோலின் உதவியுடன் போர்ச்சுகலை 1–0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இத்தாலி–பிரான்ஸ் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்லின் நகரில் நடந்தது. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. கூடுதல் நேரத்தில் யாரும் கோல் போடவில்லை. இதையடுத்து மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தங்களுக்குரிய 5 வாய்ப்பையும் கோலாக்கி அசத்திய இத்தாலி அணி 5–3 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இத்தாலி அணி உலக தரவரிசையிலும் முதலிட அரியணையில் ஏறியது.

மொத்தம் நடந்த 64 ஆட்டங்களில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன. 5 கோல்கள் போட்டு பட்டியலில் முதலிடம் பெற்ற ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ், தங்க ஷூவை சொந்தமாக்கினார். பிரேசில் வீரர் ரொனால்டோ கானாவுக்கு எதிரான 2–வது சுற்றில் முதல் கோல் அடித்த போது, உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 15 கோல்) அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இந்த தொடரில் 345 முறை மஞ்சள் அட்டையும், 28 முறை சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டு வீரர்கள் எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உலக கோப்பையை நேரில் ரசித்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது. டெலிவி‌ஷம் மூலம் அதிகம் பேர் கண்டுகளித்த உலக கோப்பை போட்டிகளில் ஒன்றாக இது அமைந்தது.

மறக்க முடியாத ‘இடி’

றுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மார்கோ மெட்டராசி இடையிலான ‘இடி’யை யாரும் மறந்து விட முடியாது. கூடுதல் நேரத்தின் 110–வது நிமிடத்தில் ஜிடேனை நோக்கி மெட்டராசி ஏதோ வசைபொழிய கோபமடைந்த ஜிடேன் அவரை ஆடு முட்டுவது போல் தலையால் முட்டி கீழே தள்ளினார். இதையடுத்து ஜிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இத்துடன் அவர் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது சகோதரியை மெட்டராசி கேவலமாக பேசி வம்புக்கு இழுத்ததாலேயே அவ்வாறு நடந்து கொண்டதாக பின்னர் ஜிடேன் தெரிவித்தார். ஆனாலும் இந்த உலக கோப்பையின் சிறந்த வீரராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஜிடேன், மெட்டராசி மீது மோதுவது போன்ற அமைப்பில் வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டு பாரீஸ் நகரில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்