கால்பந்து
19–வது உலக கோப்பை 2010 (சாம்பியன் ஸ்பெயின்)

ஆப்பிரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை இதுவாகும். உரிமம் கோரிய 5 ஆப்பிரிக்க நாடுகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் கிட்டியது.
நடத்திய நாடு–தென்ஆப்பிரிக்கா, பங்கேற்ற அணிகள்–32ஆப்பிரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை இதுவாகும். உரிமம் கோரிய 5 ஆப்பிரிக்க நாடுகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் கிட்டியது. வழக்கம் போல் 32 அணிகள் கலந்து கொண்டன. தனிநாடாக உருவான பிறகு சுலோவக்கியா பங்கேற்ற முதல் உலக கோப்பை இதுவாகும். 44 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஹோண்டுராஸ், நியூசிலாந்து அணிகளும் தகுதி பெற்றன. அதே சமயம் குரோஷியா, சுவீடன், ரஷியா, போலந்து, துருக்கி உள்ளிட்ட அணிகள் தகுதி பெற தவறின.தகுதி சுற்று ஆட்டங்களில் நடுவர்களின் தவறான முடிவால் சில சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக அயர்லாந்து–பிரான்ஸ் இடையிலான ‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் கேப்டன் தியரி ஹென்றி பந்தை கோல் பகுதியில் வைத்து கையால் கையாண்டதை நடுவர் கவனிக்கவில்லை. இல்லாவிட்டால் அயர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த விவகாரம் பெருத்த சர்ச்சையாக வெடித்தது. பிரான்சுக்கு வெற்றி கிடைத்த இந்த ஆட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் அல்லது 33–வது அணியாக தங்களை உலக கோப்பை போட்டிக்கு சேர்க்க வேண்டும் என்று அயர்லாந்து கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை கால்பந்து சம்மேளனம் ஏற்கவில்லை.இந்த உலக கோப்பையில், சூப்பர் பார்மில் இருந்த ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி, எதிர்பார்த்தது போலவே முதல்முறையாக மகுடம் சூடியது. லீக் சுற்றில் 0–1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய ஸ்பெயின் அணி அடுத்த லீக் ஆட்டங்களில் ஹோண்டுராஸ் (2–0 என்ற கோல் கணக்கில்), சிலி (2–1) ஆகிய அணிகளை வீழ்த்தி 2–வது சுற்றை எட்டியது. 2–வது சுற்றில் போர்ச்சுகலையும் (1–0), கால்இறுதியில் பராகுவேயையும் (1–0), அரைஇறுதியில் ஜெர்மனியையும் (1–0) தோற்கடித்தது.ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின்–நெதர்லாந்து அணிகள் சந்தித்தன. வழக்கமான நேரத்தில் கோல் விழவில்லை. கூடுதல் நேரத்தின் 116–வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஆந்த்ரே இனியஸ்டா வெற்றிக்கான கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பையை உச்சிமுகர்ந்த அணிகளின் வரிசையில் 8–வது அணியாக ஸ்பெயின் இணைந்தது. ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே நடந்த போட்டியில் உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையையும் ஸ்பெயின் பெற்றது.ஸ்பெயின் அணி ‘டிகி–டக்கா’ என்ற புதுமையான யுக்தியை இந்த உலக கோப்பையில் கையாண்டது. அதாவது பந்தை நீண்ட தூரம் அடிக்காமல் அருகில் இருக்கும் சக வீரர்களிடம் தட்டிக்கொடுத்தபடி பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட இந்த தந்திரம் தான் ஸ்பெயினின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.இந்த உலக கோப்பையில் ஸ்பெயின் மொத்தம் 8 கோல்களே அடித்து இருந்தது. குறைந்த கோல்கள் அடித்து சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் ஸ்பெயின் திகழ்ந்தது. அத்துடன் ‘நாக்–அவுட்’ சுற்று ஆட்டங்களில் இருந்து ஸ்பெயின் அணிக்கு எதிராக அவர்களின் தடுப்பு அரணை உடைத்து எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை. ‘நாக்–அவுட்’ சுற்று ஆட்டங்களில் ஒரு கோல் கூட வாங்காமல் உலக சாம்பியன் பட்டத்தை ஏந்திய முதல் அணியும் ஸ்பெயின் தான்.நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்கிய இத்தாலி முதல் சுற்றை தாண்டவில்லை. இதே போல் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி கால்இறுதியில் 1–2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று மூட்டையை கட்டியது.நியூசிலாந்து அணி லீக் சுற்றில் (எப் பிரிவு) சுலோவக்கியா, இத்தாலி, பராகுவே ஆகிய மூன்று அணிகளுடன் டிரா கண்டு தனது பிரிவில் 3–வது இடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த. முதல் சுற்றை தாண்டாத நியூசிலாந்து அணி, இந்த உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்பது ஆச்சரியமான உண்மையாகும்.மொத்தம் 64 ஆட்டங்களில் 145 கோல்கள் அடிக்கப்பட்டன. 32 அணிகள் கலந்து கொண்ட பிறகு குறைந்த கோல்கள் அடிக்கப்பட்ட உலக கோப்பை இது தான். சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதை டியாகோ பார்லனும் (உருகுவே), அதிக கோல்கள் (5) அடித்தவருக்கான தங்க ஷூ விருதை தாமஸ் முல்லரும் (ஜெர்மனி) பெற்றனர். இந்த உலக கோப்பை வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும், ஏறக்குறைய ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்ததாகவும் அப்போதைய சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர் அறிவித்தார்.பரிதாபமான ‘வானவில் தேசம்’‘வானவில் தேசம்’ என்று அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் மெக்சிகோவுடன் டிராவும் (1–1), உருகுவேயுடன் தோல்வியும் (0–3), பிரான்சுடன் வெற்றியும் (2–1) கண்டது. ஆனாலும் தனது பிரிவில் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் போட்டியை நடத்திய நாடு முதல் சுற்றுடன் நடையை கட்டியது இதுவே முதல் முறையாகும்.உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை தென்ஆப்பிரிக்கா பெறுவதில் அந்த நாட்டு முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா முக்கிய பங்கு வகித்தார். அவர் இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்து உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சிக்குரிய ஒரு அரிய நிகழ்வாக அமைந்தது.