கால்பந்து
உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
லிவெர்குசென், உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.பயிற்சி ஆட்டம் 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14–ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தங்களை தயார்படுத்தி வருகின்றன.இதில் ஜெர்மனியில் உள்ள லிவெர்குசென் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில், உலக கோப்பை போட்டியில் ‘எப்’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சவூதி அரேபியாவுடன் மோதியது.ஜெர்மனி அணி வெற்றி விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி வீரர் டிமோ வெர்னெர் 8–வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். 2–வது கோல் ஜெர்மனி அணிக்கு சுய கோல் மூலம் கிடைத்தது. 43–வது நிமிடத்தில் சவூதி அரேபியா வீரர் ஓம் ஹாவ்சாவி தடுத்த பந்து எதிர்பாராதவிதமாக தங்களது அணியின் கோல் கம்பத்துக்கு இடையில் புகுந்து சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதியில் ஜெர்மனி அணி 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.பின் பாதியில் சவூதி அரேபியா அணி ஆறுதல் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் தாய்செர் அல் ஜாஸ்சம் 84–வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார். முடிவில் ஜெர்மனி அணி 2–1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி கண்டது.ஜப்பான் அணி தோல்வி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லுகானோ நகரில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில், ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து அணி, ‘எச்’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜப்பானை சந்தித்தது.ஆட்டத்தின் 42–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் மாயா யோஷிடா, சுவிட்சர்லாந்து வீரர் பிரீஸ் எம்போலாவை பவுல் செய்தார். இதைத்தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுவிட்சர்லாந்து வீரர் ரிகார்டோ ரோட்ரிக்ஸ் கோல் அடித்தார். 82–வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி 2–வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஹாரிஸ் செப்ரோவிச் இந்த கோலை திணித்தார். கடைசி வரை ஜப்பான் அணியால் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. இதனால் சுவிட்சர்லாந்து அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியது.ஆட்டம் ‘டிரா’ போலந்து நாட்டில் உள்ள போஸ்னன் நகரில் நடந்த இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து அணி, உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாத சிலி அணியுடன் மோதியது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் பாதியில் போலந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றாலும், அதனை கடைசி வரை அந்த அணியால் தக்க வைத்து கொள்ள இயலாமல் போனது.