உலக கோப்பை கால்பந்து 2018: துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக துவங்கியது

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று துவங்குகிறது. முன்னதாக, துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. #WorldCup

Update: 2018-06-14 14:49 GMT
மாஸ்கோ,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.  சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

முதல் நாளான இன்று நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவுதிஅரேபியாவும் (ஏ பிரிவு) மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் சந்திக்கின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக, சுமார் 8 மணியளவில் (இந்திய நேரப்படி) தொடக்க விழா நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற துவக்க விழாவில் இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார்.  கலைஞர்களின் நடனம் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் விழாவில் இடம் பெற்றது. மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். 

மேலும் செய்திகள்