உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள்

எகிப்து-உருகுவே, மொராக்கோ- ஈரான், போர்ச்சுகல்-ஸ்பெயின் ஆகிய அணிகள் மோத உள்ளன.

Update: 2018-06-14 23:30 GMT
எகடெரின்பர்க்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டங்களில் எகிப்து-உருகுவே (மாலை 5.30 மணி), மொராக்கோ -ஈரான் (இரவு 8.30 மணி), போர்ச்சுகல்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் எகிப்து-உருகுவே (ஏ பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் எகடெரின்பர்க்கில் நடக்கிறது.

28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள எகிப்து அணியில் சூப்பர் ஸ்டார் முகமது சலா தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டதால் தொடக்க ஆட்டத்தில் ஆடுவாரா? இல்லையா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உலா வந்தது. இந்த நிலையில் அதற்கு விடை கொடுத்துள்ள எகிப்து பயிற்சியாளர் ஹெக்டர் ஹூபர், ‘உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் முகமது சலா ஆடுவார் என்று 100 சதவீதம் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். லிவர்பூல் கிளப் அணிக்காக கடந்த சீசனில் முகமது சலா 44 கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார். அவர் உடல்தகுதி பெற்றிருப்பது எகிப்து அணிக்கு புது தெம்பை அளித்துள்ளது.

2 முறை சாம்பியனான உருகுவே அணியில் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி ஆகியோர் இரட்டை தூண்களாக உள்ளனர். இவர்களைத்தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. உருகுவே வலுவான அணி என்றாலும், எகிப்து எல்லா வகையிலும் சவால் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறது. உலக கோப்பையில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு உருகுவே அணி தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா? அல்லது அந்த ஏக்கம் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

‘பி’ பிரிவில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கும் ஆட்டத்தில் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோவும், ஆசிய நாடான ஈரானும் மல்லுகட்டுகின்றன.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் மொராக்கோ அணி தரவரிசையில் 14-வது இடம் வகிக்கிறது. கடைசியாக ஆடிய 18 சர்வதேச போட்டிகளில் தோல்வியே சந்திக்காத மொராக்கோ, அதே உத்வேகத்துடன் ஈரானையும் எதிர்கொள்கிறது. வலுவான தடுப்பு அரணும், ஒருங்கிணைந்த ஆட்டமே மொராக்கோவின் பலத்தை பறைசாற்றக்கூடியதாகும். ஹகிம் ஜியேச், காலித் பவுடாய்ப் அந்த அணியின் முக்கியமான வீரர்களாக விளங்குகிறார்கள்.

உலக கோப்பை போட்டியில் 5-வது முறையாக களம் காணும் ஈரான் அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றி 1998-ம் ஆண்டு உலக கோப்பையில் கிடைத்தது. முதல் சுற்றை கடப்பது மலைப்பான விஷயம் என்பதை உணர்ந்துள்ள மசோத் ஷோஜய் தலைமையிலான ஈரான் அணி வீரர்கள் ஒரு வெற்றியாவது பெற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார்கள்.

இந்த உலக கோப்பை தொடரில் எதிர்பார்ப்புக்குரிய ஆட்டங்களில் ஒன்றாக ஸ்பெயின்- போர்ச்சுகல் (பி பிரிவு) ஆட்டம் அமைந்துள்ளது. இந்த ஆட்டம் சோச்சி நகரில் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு அரங்கேறுகிறது.

கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணியில் இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் சரியான கலவையில் இடம் பிடித்துள்ளனர். டேவிட் சில்வா, இனியஸ்டா, கேப்டன் செர்ஜியோ ரமோஸ், இஸ்கோ, ஜோர்டி அல்பா உள்ளிட்டோர் நம்பிக்கை வீரர்களாக பரிமளிக்கக் கூடியவர்கள். கடைசியாக ஆடிய 20 சர்வதேச ஆட்டங்களில் ஸ்பெயின் அணி தோல்வி பக்கமே செல்லவில்லை. இந்த உலக கோப்பைக்கு மிக அருமையாக தயாராகி வந்த ஸ்பெயின் அணியில் கடைசி கட்டத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு விட்டது. ரியல்மாட்ரிட் கிளப்புடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தியதால் ஸ்பெயின் பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த பிரச்சினை ஸ்பெயின் அணியின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை போட்டியின் போது தான் கணிக்க முடியும்.

ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி உலக கோப்பை போட்டியில் அதிகபட்சமாக 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது. போர்ச்சுகல் அணியின் கேப்டன் 33 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம். கிளப் போட்டிகளில் கலக்கும் ரொனால்டோ தேசிய அணிக்காகவும் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். புருனே ஆல்வ்ஸ், பெபே, ரபெல் குயரீரோ உள்ளிட்டோர் ரொனால்டோவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனாலும் தடுப்பாட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயினை போர்ச்சுகல் சமாளிக்குமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் ஸ்பெயினும், 6-ல் போர்ச்சுகலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 13 ஆட்டங்கள் டிரா ஆகின.

மூன்று ஆட்டங்களையும் சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் செய்திகள்