கால்பந்து
பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார், மெஸ்சி: அர்ஜென்டினா அணியை மிரளவைத்த ஐஸ்லாந்து

உலக கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை மிரளவைத்த சிறிய அணியான ஐஸ்லாந்து ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது.
மாஸ்கோ,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் மாஸ்கோவில் நேற்று அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, உலக கோப்பையில் முதல்முறையாக நுழைந்துள்ள ஐஸ்லாந்து அணியை (டி பிரிவு) எதிர்கொண்டது.

துடிப்புடன் தொடங்கிய அர்ஜென்டினா வீரர்கள், ஐஸ்லாந்து கோல் கம்பத்தை அடிக்கடி முற்றுகையிட்டு நெருக்கடி கொடுத்தனர். அதேசமயம் அறிமுக அணியான ஐஸ்லாந்து வீரர்கள் அர்ஜென்டினாவுக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுத்து ஆடினர். 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகுரோ 12 மீட்டர் தூரத்தில் இருந்து இடது காலால் உதைத்து பந்தை கோலாக்கினார். இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு அதிக நேரம் நீடிக்கவில்லை.

23-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் சிகுர்ட்சன் இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் கபலெரோ தடுத்தார். திரும்பி வந்த பந்தை மற்றொரு ஐஸ்லாந்து வீரர் ஆல்பிரெட் பின்போகசன் கண்ணிமைக்கும் நேரத்தில் வலைக்குள் அனுப்பினார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் கோல் அடித்த முதல் ஐஸ்லாந்து வீரர் என்ற வரலாற்று பதிவுக்கு 29 வயதான பின்போகசன் சொந்தக்காரர் ஆனார்.

முதல் பாதியில் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் இருந்தது. பிற்பகுதியில் அர்ஜென்டினா வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். ஐஸ்லாந்து அணியினர் தடுப்பு வளையத்தை வலுப்படுத்தி அர்ஜென்டினாவை மிரள வைத்தனர்.

63-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அகுரோ கோல் பகுதியில் வைத்து பந்தை தலையால் முட்ட முயற்சிப்பதற்குள் அவரை ஐஸ்லாந்து வீரர் மாக்னஸ்சன் லேசாக தள்ளிவிட்டார். இதையடுத்து அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த பொன்னான பெனால்டி வாய்ப்பை அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி வீணடித்தார். சற்று தாழ்வாக அவர் அடித்த ஷாட்டை ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹான்ஸ் ஹால்டோர்சன் வலதுபக்கமாக பாய்ந்து தடுத்து அமர்க்களப்படுத்தினார். இந்த உலக கோப்பையில் பெனால்டியை தவற விட்ட முதல் வீரர் மெஸ்சி தான். இதனால் அர்ஜென்டினா அணியினரும், ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இதன் பின்னர் வெற்றிக்குரிய கோல் அடிக்க அர்ஜென்டினா வீரர்கள் கடுமையாக போராடினர். மெஸ்சி அடித்த சில நல்ல ஷாட்டுகளை எதிரணி கோல் கீப்பர் ஹால்டோர்சன் முறியடித்தார். அவர் தான் இந்த ஆட்டத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டும். அர்ஜென்டினா ஜாம்பவான் மரடோனா ஆட்டத்தை நேரில் கண்டுகளித்து தங்கள் அணியினரை உற்சாகப்படுத்தினார். இருப்பினும் 72 சதவீதம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அர்ஜென்டினா வீரர்களால், ஐஸ்லாந்தின் தடுப்பாட்ட யுக்தியை தகர்க்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் மெஸ்சி பந்தை உதைத்த போது, வரிசையாக மறித்தபடி நின்ற வீரர்கள் மீது பட்டு அதுவும் ஏமாற்றத்தையே கொடுத்தது.

முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஐஸ்லாந்து, உலக கோப்பையில் ஆடும் குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஒரு தேசமாகும். இங்கு 3 லட்சத்து 33 ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். இந்த டிராவை அவர்கள் வெற்றி போல் நினைத்து ஆனந்த கூத்தாடினர். இன்று ஐஸ்லாந்தின் சுதந்திர தினம் என்பது நினைவு கூரத்தக்கது.