கால்பந்து
ஸ்பெயின்-போர்ச்சுகல் ஆட்டம் டிரா: ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை

ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து புதிய சாதனை படைத்தார்.
சோச்சி,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து புதிய சாதனை படைத்தார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு சோச்சி நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்-போர்ச்சுகல் (பி பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தொடக்கம் முதல் கடைசி வரை ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்துடன் எதிரணி கோல் எல்லையை நோக்கி முன்னேறினார். அவரை விதிமுறைக்கு மாறாக ஸ்பெயின் வீரர் நாசோ காலால் தடுத்து முட்டுக்கட்டை போட்டதால் கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ, ஸ்பெயின் அணி கோல் கீப்பர் டேவிட் டி ஜியை லாவகமாக ஏமாற்றி முதல் கோல் அடித்தார். உலக கோப்பை போட்டி வரலாற்றில் குறுகிய நேரத்தில் பெனால்டி வாய்ப்பில் அடிக்கப்பட்ட 3-வது கோல் இதுவாகும்.

24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் டிகோ கோஸ்டா 3 பின்கள வீரர்கள் மற்றும் போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பாட்ரிசிலோ ஆகியோருக்கு ‘தண்ணி’ காட்டி பந்தை கோலுக்குள் திணித்தார். 44-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி வீரர் ரொனால்டோ இடது காலால் உதைத்த பந்தை, ஸ்பெயின் அணி கோல் கீப்பர் கையால் தடுத்தும் அது நிற்காமல் கோலுக்குள் புகுந்தது. ரொனால்டோ அடித்த 2-வது கோல் இதுவாகும். முதல் பாதியில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின் பாதியில் ஸ்பெயின் அணியே கணிசமாக ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியினர் குறுகிய தூரத்தில் பந்தை துல்லியமாக கடத்தி எதிரணியினருக்கு வாய்ப்பு கிடைக்காத வகையில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் (61 சதவீதம்) வைத்து இருந்தனர். ஸ்பெயின் அணியினர் பந்தை தங்களுக்குள் கடத்தி முன்னேறிய பாணி (டிக்கி டாக்கா பாஸ்) ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 55-வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் அணி வீரர் டிகோ கோஸ்டா அபாரமாக 2-வது கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் நாசோ அருமையாக ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பதில் கோல் அடிக்க போர்ச்சுகல் அணி துடித்தாலும், அந்த அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு பந்து கிடைக்காத வகையில் ஸ்பெயின் அணியினர் தடுப்பு ஆட்டத்தை கச்சிதமாக கையாண்டனர். ஸ்பெயின் அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததால் அந்த அணி வெற்றியை சுவைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்டம் முடிய 2 நிமிடம் இருக்கையில் (88-வது நிமிடம்) எதிரணி கோல் எல்லையை நோக்கி ஊடுருவிய ரொனால்டோவை, ஸ்பெயின் வீரர் ஜெரார்ட் பிக்கு பனியனை பிடித்து இழுத்து நிறுத்தினார். இதனால் போர்ச்சுகல் அணிக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு அளிக்கப்பட்டது. நெருக்கடிக்கு மத்தியில் ‘பிரிகிக்’ வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ அடித்த பந்து, ஸ்பெயின் அணியினரின் தடுப்பு அரணை தகர்த்து கோல் கம்பத்துக்கு வெளியே செல்வது போல் சென்று கோலுக்குள் திரும்பிய விதம் பரவசப்படுத்தியது. 23 மீட்டர் தூரத்தில் இருந்து ரொனால்டோ அடித்த இந்த ‘பிரிகிக்’ ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. முந்தைய மூன்று உலக கோப்பை போட்டிகளில் தலா ஒரு கோல்கள் மட்டுமே அடித்த ரொனால்டோ, இந்த முறை தொடக்க ஆட்டத்திலேயே 3 கோல்கள் (ஹாட்ரிக்) அடித்து ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார்.

ரொனால்டோவின் கடைசி நிமிட கோலால் போர்ச்சுகல் அணி தோல்வியில் இருந்து தப்பியது. இதனால் விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரொனால்டோ (33 வயது) தற்காப்பு ஆட்டத்தில் சிறந்த அணியான ஸ்பெயினுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்ததன் மூலம், உலக கோப்பை போட்டியில் அதிக வயதில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 1978-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 30 வயதான நெதர்லாந்து வீரர் ரென்சென்பிரிங், ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. அத்துடன் உலக கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த 3-வது போர்ச்சுகல் வீரர் என்ற சிறப்பையும் ரொனால்டோ பெற்றார்.

ரொனால்டோவின் 51-வது ‘ஹாட்ரிக்’

* ஸ்பெயினுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த ‘ஹாட்ரிக்’ கோல், அவரது கால்பந்து வாழ்க்கையில் (கிளப் போட்டியையும் சேர்த்து) அடிக்கப்பட்ட 51-வது ‘ஹாட்ரிக்’ கோலாகும். போர்ச்சுகல் அணிக்காக அவர் அடித்த 6-வது ஹாட்ரிக் கோல் இது. அத்துடன் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரங்கேறிய 51-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வு இதுவாகும். ரொனால்டோ ஒரு ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அவரது அணி வெற்றி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும்.

* 151-வது சர்வதேச போட்டியில் ஆடிய ரொனால்டோ இதுவரை 84 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் அதிக கோல்கள் அடித்தவரான ஹங்கேரி வீரர் புஸ்காஸ்சின் சாதனையை சமன் செய்தார்.

* 4 உலக கோப்பை போட்டி தொடரில் (2006, 2010, 2014, 2018) கோல் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையையும் கிறிஸ்டியானா ரொனால்டோபெற்றார். ஏற்கனவே பீலே (பிரேசில்), சீலெர் (ஜெர்மனி), மிரோஸ்லாவ் குளோஸ் (ஜெர்மனி) ஆகியோர் 4 உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்து இருக்கிறார்கள்.