இன்று களம் இறங்குகிறது ஜெர்மனி, பிரேசில்

இன்று ஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் களம் இறங்குகிறன.

Update: 2018-06-16 23:30 GMT
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், ஜெர்மனி அணிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மற்ற நாட்டினரும் இவ்விரு அணிகளின் ஆட்டங்களை வெகுவாக ரசிப்பது உண்டு.

5 முறை உலக சாம்பியனான பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்து அணியை துறைமுக நகரான ரோஸ்டோவ் ஆன்-டானில் இன்று சந்திக்கிறது. புதிய பயிற்சியாளர் டைட்டின் வருகைக்கு பிறகு எழுச்சி பெற்றுள்ள பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் கால்களின் வித்தையை காண ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். 1934-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் பிரேசில் தங்களது முதல் ஆட்டத்தில் தோற்றதில்லை. அந்த பெருமையை இந்த போட்டியிலும் தொடர்வதற்காக வரிந்து கட்டி நிற்பார்கள்.

11-வது முறையாக உலக கோப்பையில் ஆடும் சுவிட்சர்லாந்து அணியின் தடுப்பு அரண் பலம் வாய்ந்தது. தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியில் ஷெர்டன் ஷகிரி நம்பிக்கை வீரராக மின்னுகிறார். கடந்த உலக கோப்பையில் இவர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்திருந்தார். அதனால் முதல் தடையை கடப்பதற்கு பிரேசில் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோ அணியை மாஸ்கோவின் லுஸ்கினி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து 43 கோல்களை போட்டுத்தாக்கிய ஜெர்மனி அதே சீற்றத்தை இந்த ஆட்டத்திலும் காட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளது. அதே சமயம் 16-வது முறையாக உலக கோப்பையில் கால்பதிக்கும் மெக்சிகோவும் லேசுப்பட்ட அணி அல்ல. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோற்று இருந்தது. அதனால் தாக்குதல் பாணியை கையாளும் பலம் வாய்ந்த ஜெர்மனிக்கு மெக்சிகோ அணி ‘சோதனை’ கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும் செய்திகள்