கால்பந்து
சுயகோல், பெனால்டி உதவியுடன் நைஜீரியாவை நசுக்கியது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை நசுக்கியது.
கலினிங்கிராட்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு கலினிங்கிராட் நகரில் நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் குரோஷியா-நைஜீரியா அணிகள் மோதின.

இளம் வீரர்கள் அடங்கிய நைஜீரியா அணி, அனுபவம் வாய்ந்த குரோஷியாவின் யுக்தியை சாதுர்யமாக சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 13-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிச் அடித்த நல்ல ஷாட் மயிரிழையில் கம்பத்திற்கு மேலாக பறந்தது. இது போன்ற மேலும் சில வாய்ப்புகளை குரோஷிய வீரர்கள் வீணடித்தனர்.

32-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை முதலில் குரோஷியாவின் ஆன்ட் ரிபிச்சும், பிறகு சக வீரர் மரியோ மான்ட்ஜூகிச்சும் தலையால் முட்டி தள்ளினர். அப்போது வலை அருகில் நின்ற நைஜீரியா வீரர் ஒஹெனகரோ எடிபோ காலால் தடுக்க முயன்ற போது அது துரதிர்ஷ்டவசமாக அவரது காலில் பட்டு வலைக்குள் புகுந்து சுயகோலாக (ஓன்கோல்) மாறியது.

கடந்த உலக கோப்பையில் ‘நாக்-அவுட்’ சுற்றில் பிரான்சுக்கு எதிராக தோல்வி அடைந்த ஆட்டத்தில் நைஜீரியா அணி இதே போல் சுயகோல் போட்டது. உலக கோப்பை போட்டி வரலாற்றில் அடுத்தடுத்த இரு ஆட்டங்களில் சுயகோல் அடித்த முதல் அணி நைஜீரியா தான்.

‘சூப்பர் ஈகிள்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நைஜீரியா அணியினரால், குரோஷியாவின் கோல் பகுதிக்குள் அவ்வளவு எளிதில் ஊடுருவ முடியவில்லை. சொல்லப்போனால் முதல்பாதியில் அந்த அணி இலக்கை நோக்கி துல்லியமாக ஒரு ஷாட் கூட உதைக்கவில்லை.

பிற்பாதியிலும் குரோஷியா வீரர்களின் ஆதிக்கமே ஓங்கியது. 71-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை எதிரணியின் கோல்பகுதியில் நின்ற குரோஷியா வீரர் மான்ட்ஜூகிச் துள்ளி குதித்து தலையால் முட்டுவதற்கு தயாராக இருந்தார். இதை தடுக்கும் வகையில் நைஜீரியா வீரர் வில்லியம் இகோங், மான்ட்ஜூகிச்சை வளைத்து பிடித்து அமுக்கி கீழே தள்ளினார். இதனால் இகோங்குக்கு மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரித்த போட்டி நடுவர், குரோஷியாவுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். அந்த வாய்ப்பை குரோஷியா கேப்டன் லுகா மோட்ரிச் எளிதில் கோலாக்கினார். கடைசி நிமிடத்தில் அந்த அணி மேலும் ஒரு கோல் அடித்திருக்க வேண்டியது. பந்துடன் கோல்பகுதிக்குள் தனியே முன்னேறிய கோவாசிச், அருகில் வந்து சுதாரிப்பு இல்லாமல் நேராக நைஜீரியா கோல் கீப்பர் பிரான்சிஸ் ஜோகோவின் கைக்குள் பந்தை அடித்து ஏமாற்றினார்.

முடிவில் குரோஷியா 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை சாய்த்து இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தங்களது தொடக்க ஆட்டத்தில் குரோஷியா ருசித்த முதல் வெற்றி இது தான்.

நைஜீரியா பயிற்சியாளர் ஜெர்னட் ரோர் கூறுகையில், ‘தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்களை விட குரோஷியா சிறப்பாக ஆடியதை ஒப்புக்கொள்கிறேன். எங்களது இளம் வீரர்கள் சில தவறுகளை குறிப்பாக ‘கார்னர்’ பகுதிகளில் செய்தனர். தோல்வியை மறந்து விட்டு ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஐஸ்லாந்தை தோற்கடித்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

முன்னதாக ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வென்றது.