கால்பந்து
கோஸ்டாரிகா அணியை பதம் பார்த்தது செர்பியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை பதம் பார்த்தது.
சமரா,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 அணிகள் வீதம் மொத்தம் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் சமரா நகரில் நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் கோஸ்டாரிகா-செர்பியா அணிகள் (இ பிரிவு) மோதின.

தொடக்கத்தில் பந்து செர்பியா வசமே அதிகமாக சுற்றிக் கொண்டு இருந்தது. இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முனைப்பு காட்டிய போதிலும் முயற்சி ஈடேறவில்லை. 11-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீரர் ஜியான்கார்லோ கோன்சலேஸ் கோல்பகுதியின் அருகில் நின்று பந்தை தலையால் முட்டிய போது அது வெளியே ஓடியதால், பொன்னான வாய்ப்பு நழுவிப்போனது. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பிற்பாதியில் 56-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீரர் டேவிட் குஸ்மான், செர்பியாவின் டோசிச்சை காலை இடறிவிட்டு ‘பவுல்’ செய்ததால் அவருக்கு நடுவர் மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தார். அத்துடன் செர்பியாவுக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு வழங்கினார்.

‘பிரிகிக்’ வாய்ப்பில் 23 மீட்டர் தூரத்தில் இருந்து செர்பியா கேப்டன் அலெக்சாண்டர் கோலாரோவ் பந்தை இடது காலால் உதைத்தார். மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த பந்து அரண்போல் வரிசையாக நின்ற வீரர்களை தாண்டி லாவகமாக வலையின் கார்னர் பகுதிக்குள் நுழைந்தது. கோஸ்டாரிகா கோல் கீப்பர் கெய்லோர் நவாஸ் இடது பக்கமாக டைவ் அடித்து பார்த்தும் பலன் இல்லை. கோலாரோவ் கோல் அடித்த விதம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இதன் பின்னர் பதில் கோல் திருப்ப கோஸ்டாரிகா மல்லுகட்டினாலும், கடைசி கட்டத்தில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய செர்பியா ஒரே கோலை வெற்றிக்குரிய கோலாக மாற்றி காட்டி அசத்தியது.

முடிவில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் களம் கண்ட பிரனிஸ்லாவ் இவானோவிச், அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய செர்பிய வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவருக்கு இது 104-வது சர்வதேச போட்டியாகும். இதற்கு முன்பு டேஜன் ஸ்டான்கோவிச் 103 ஆட்டங்களில் பங்கேற்றதே செர்பிய வீரரின் சாதனையாக இருந்தது.

தோல்விக்கு பிறகு கோஸ்டாரிகா பயிற்சியாளர் ஆஸ்கர் ரமிரேஸ் கூறுகையில், ‘இது நெருக்கமான ஆட்டமாக இருந்தது. செர்பியா போன்று நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். அடுத்து உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அணியையும் (பிரேசில்), 6-வது இடத்தில் உள்ள அணியையும் (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறோம். இது மிகவும் கடினமான போட்டியாக இருக்கப்போகிறது. ஆனால் நான் எங்களது வீரர்களிடம் ‘எதுவும் முடிந்து போய் விடவில்லை; நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று கூறியிருக்கிறேன்’ என்றார்.