உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி: மெக்சிகோவிடம் வீழ்ந்தது

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவிடம் வீழ்ந்தது.

Update: 2018-06-17 23:30 GMT
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து திருவிழாவில், நேற்றிரவு அரங்கேறிய முக்கியமான ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஜெர்மனி, மெக்சிகோவை (எப் பிரிவு) எதிர்கொண்டது.

ஜெர்மனி வீரர்கள் வழக்கம் போல் தாக்குதல் பாணியை தொடுத்தனர். அவர்களது வழியில் மெக்சிகோ அணியினரும் களத்தில் புயல்போல் வேகத்தை காட்டினர். 8-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் அந்த அணி வீரர் மிக்யூல் லயூன் அடித்த ஷாட் கம்பத்திற்கு மேலாக சென்றது.

மெக்சிகோ வீரர்களின் தடாலடியான ஆட்டம் ஜெர்மனிக்கு திகைப்பூட்டியது. 35-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஹிர்விங் லோஜனோ, சக வீரர் கடத்தி தந்த பந்தை ஜெர்மனியின் தடுப்பாட்ட ஆட்டக்காரர்களை ஏமாற்றி நேர்த்தியாக கோலாக்கி, அரங்கை அதிர வைத்தார். இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பதிலடி கொடுக்க ஜெர்மனி வீரர்கள் கங்கணம் கட்டி நின்றனர். ஆனால் மெச்சிகோவின் வலுவான தடுப்பு வளையத்தை அவர்களால் சிதைக்க முடியவில்லை. ஜெர்மனி அணியினர் தங்கள் பகுதிக்குள் வந்தாலே அனைத்து மெக்சிகோ வீரர்களும் ஒன்று கூடி விடுவதும், ஒரு வழியாக அவர்களை கடந்தாலும் அனுபவம் வாய்ந்த மெக்சிகோ கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் ‘செக்’ வைப்பதுமாக ஆட்டத்தின் போக்கு நகர்ந்தது. ஜெர்மனியின் நட்சத்திர வீரர் டோனி குரூஸ் அடித்த ஒரு ஷாட் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

மெக்சிகோவை விட நிறைய ஷாட்டுகளை (25) ஜெர்மனி அணியினரே அடித்தனர். பந்தும் இவர்கள் (60 சதவீதம்) வசமே அதிகமாக இருந்தது. இருப்பினும் இவர்களின் எல்லா வியூகங்களுக்கும் தங்களது ஆர்ப்பரிப்பான ஆட்டத்தின் மூலம் மெக்சிகோ அணியினர் ‘வேட்டு’ வைத்தனர்.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. நடப்பு உலக கோப்பையில் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி இதுவாகும். 1982-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி சந்தித்த முதல் தோல்வியாக இது பதிவானது.

அதே சமயம் ஜெர்மனி அணியை மெக்சிகோ வீழ்த்துவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு நட்புறவு ஆட்டத்தில் வென்று இருந்தது.

இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய மெக்சிகோவின் 39 வயதான ரபெல் மர்கியூசுக்கு இது 5-வது உலக கோப்பை போட்டியாகும். இதன் மூலம் 5-வது உலக கோப்பையில் கால்பதித்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

மேலும் செய்திகள்