கால்பந்து
உலககோப்பை கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது ரஷ்யா

உலககோப்பை கால்பந்து போட்டியில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி வீழ்த்தியது. #FIFAWorldCup
மாஸ்கோ, 

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில், இன்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 70வது தரவரிசையில் இருக்கும் ரஷ்ய அணி, 45வது தரவரிசையிலுள்ள எகிப்து அணியை (பிரிவு ஏ) எதிர்கொண்டது. 

ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் இரவு 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி) மாஸ்கோவில் தொடங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதி ஆரம்பித்த 47-வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அஹ்மெத் ஃபதீ கோல் அடித்து அசத்தினார். பின்னர் 59வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் டேனிஷ் செரிஷெவ் கோல் அடிக்க, அடுத்த சில நிமிடங்களிலேயே அர்டேம் டிஷ்யூஷா மற்றொருமொரு கோல் அடித்து ரஷ்ய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்மூலம் ரஷ்ய அணி 3 கோல்கள் அடித்து வலுவான நிலையில் இருந்தது. 

இதனிடையே ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் எகிப்து அணியின் முகமத் ஷலாஹ் கோல் அடித்தார். இருப்பினும் ரஷ்ய வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்தால் எகிப்து 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. எகிப்து அணியை வீழ்த்தியதன் மூலம் ரஷ்ய அணி உலகக்கோப்பை போட்டியின் இந்த சீசனில் தொடர்ந்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

முன்னதாக நடைபெற்ற போலந்து-செனகல் அணிகளுக்கிடையேயான போட்டியில் செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.