கால்பந்து
ரஷிய அணி 2-வது வெற்றி எகிப்தை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டத்தில் ரஷிய அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் எகிப்தை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க், உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டத்தில் ரஷிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தை தோற்கடித்து 2–வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.விறுவிறுப்பான ஆட்டம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் போட்டியை நடத்தும் ரஷியா, எகிப்து அணியை எதிர்கொண்டது.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இரு அணி வீரர்களும் கோலை நோக்கி அடித்த பல ஷாட்கள் மயிரிழையில் கோல் கம்பத்துக்கு வெளியில் சென்று வீணானது.சுய கோல் பிற்பாதி ஆட்டத்தில் ரஷிய அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி வீரர்கள் அடிக்கடி எதிரணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டனர். 47–வது நிமிடத்தில் ரஷிய அணிக்கு முதல் கோல் வந்தது. ரஷிய அணி வீரர் அலெக்சாண்டர் கோலோவின் கோலை நோக்கி அடித்த பந்தை, எகிப்து அணியின் கோல்கீப்பர் முகமது எல்ஷெனாவி கையால் குத்தி வெளியேற்ற முயற்சித்தார். அந்த பந்தை உடனடியாக தன்வசப்படுத்திய அலெக்சாண்டர் கோலோவின், அணியின் சக வீரரை நோக்கி திருப்பினார். அந்த நேரத்தில் எகிப்து அணி கேப்டன் அகமது பதி பந்தை தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது காலில் பட்டு சுயகோலாக மாறியது. இந்த போட்டி தொடரில் அடிக்கப்பட்ட 5–வது சுய கோல் இதுவாகும். இதனால் ரஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.59–வது நிமிடத்தில் ரஷிய அணி 2–வது கோலை அடித்தது. அந்த அணி வீரர் டெனிஸ் செரிஷிவ் இந்த கோலை அடித்தார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த 3–வது கோல் இதுவாகும். சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் டெனிஸ் செரிஷிவ் 2 கோல்கள் அடித்து இருந்தார். 62–வது நிமிடத்தில் ரஷிய அணி 3–வது கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர் ஆர்டெம் டிஸ்யூபா அருமையாக இந்த கோலை அடித்தார்.ரஷிய அணி வெற்றி 73–வது நிமிடத்தில் எகிப்து அணி பதில் கோல் திருப்பியது. கோல் எல்லைக்குள் வைத்து எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சலாவை, ரஷிய வீரர் ரோமன் ஜோபின் பவுல் செய்தார். இதற்கு நடுவர் முதலில் பிரிகிக் கொடுத்தார். எகிப்து வீரர்களின் முறையீட்டை தொடர்ந்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து அது பெனால்டி வாய்ப்பாக மாற்றப்பட்டது. இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எகிப்து அணி வீரர் முகமது சலா ஆறுதல் கோல் அடித்தார். காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் ஆடாத முகமது சலா, இந்த ஆட்டத்தில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை ரஷிய தடுப்பு ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டு முடக்கினார்கள்.அதன் பிறகு இரு அணிகளும் கோல் எடுக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரஷிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. முதல் லீக் ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்று இருந்தது. எகிப்து அணி சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் அந்த அணி 0-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் தோல்வி கண்டு இருந்தது.சாதனை சமன் இந்த உலக கோப்பை போட்டியில், போட்டியை நடத்தும் ரஷிய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்து சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. இதற்கு முன்பு 1934–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில், போட்டியை நடத்திய இத்தாலி அணி முதல் இரண்டு ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்து நல்ல தொடக்கம் கண்டு இருந்தது. அந்த சாதனையை ரஷிய அணி சமன் செய்துள்ளது.