கால்பந்து
உலககோப்பை கால்பந்து போட்டி: 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரோஷியா அணி

உலககோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி குரோஷியா அணி அபார வெற்றி பெற்றது. #FIFAWorldCup
மாஸ்கோ, 

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில், நேற்றிரவு 11.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் 5-வது தரவரிசையில் இருக்கும் அர்ஜென்டினா அணி, 20-வது தரவரிசையிலுள்ள குரோஷியா அணியை (பிரிவு டி) எதிர்கொண்டது. 

இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, பெனால்டி வாய்ப்பை நழுவ விட்டதால் வெற்றிபெற முடியாமல் போய் விட்டது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அர்ஜென்டினா அணி களமிறங்கியது. 

போட்டி துவங்கிய முதல் பாதியில் இரு அணிகளும் வலிமையுடன் ஈடுகொடுத்து விளையாடியதால் ஆட்டத்தில் எந்த கோல் கணக்கும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையே போட்டியின் 53-வது நிமிடத்தில் குரோஷிய அணியின் வீரர் ஆன்டீ ரெபிக் தடைகளை கடந்து அர்ஜென்டினாவுக்கு எதிராக தங்கள் அணியின் முதல் கோல் கணக்கை துவக்கி வைத்தார். அடுத்ததாக 80-வது நிமிடத்தில் குரோஷிய அணியின் வீரர் லூகா மோட்ரிக்கும் தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, மைதானத்திலிருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் மவுனம் ஆகினர். 

எப்படியும் தங்கள் அணி வெற்றி பெற்று விடும் என்ற அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்களின் கனவு, கானல்நீராகும் படி போட்டியின் கூடுதல் நிமிடத்தில் இவான் ரகிடீக் அசத்தலான கோல் அடித்து குரோஷியா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் நட்சத்திர வீரர் மெஸ்சி இருந்தும் அர்ஜென்டினா அணி தோல்வியை தழுவியிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற குரோஷியா அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.