ஈரானை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல் வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Update: 2018-06-21 22:00 GMT

கஜன்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

தாக்குதல் ஆட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கஜன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, ஈரானை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணியினர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் ஈரான் அணியினர் கோல் வாங்கி விடக்கூடாது என்பதற்காக தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள். ஸ்பெயின் அணியினர் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு அடிக்கடி கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டாலும் அவை தோல்வியில் தான் முடிந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

டியாகோ கோஸ்டா கோல் அடித்தார்

2–வது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் அணியினரின் கையே ஓங்கி இருந்தது. ஸ்பெயின் அணியினரிடம் இருந்து பந்தை தங்கள் வசப்படுத்த ஈரான் அணி கடுமையாக போராட வேண்டியது இருந்தது. அந்த அளவுக்கு ஸ்பெயின் அணியினரின் பந்தை கடத்தும் பாங்கு கச்சிதமாக இருந்தது.

54–வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்தது. ஆந்த்ரே இனியஸ்டா கடத்தி கொடுத்த பந்தை டியாகோ கோஸ்டா கோலுக்குள் திருப்பி ஸ்பெயின் அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். டியாகோ கோஸ்டா அடித்த 3–வது கோல் இதுவாகும். அவர் போர்சுக்கல் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து இருந்தார்.

ஸ்பெயின் அணி முதல் வெற்றி

கோல் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ஈரான் அணியினர் பதில் கோல் திருப்ப பகீரத முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் கிடைத்த சில சந்தர்ப்பங்களை அவர்களால் கோலாக்க முடியவில்லை. பந்தை கோல் கம்பத்துக்கு வெளியேயும், மேலேயும் அடித்து வீணடித்தனர். 63–வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் சக வீரர் அடித்த பந்தை, ஈரான் அணியின் சைத் எஸ்டோலாஹிஸ் கோலுக்குள் திணித்தார். இதனால் கோல் என்று நினைத்து ஈரான் அணியினர் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் ஸ்பெயின் அணியினரின் கோல் இல்லை என்று அப்பீல் செய்ததை தொடர்ந்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்கையில் அது ‘ஆப்–சைடு’ என்று தெரியவந்தது. எனவே அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். இதனால் ஈரான் அணியினர் சோகத்தில் ஆழ்ந்தனர். இரு அணியினரும் கோல் அடிப்பதில் அதிக முனைப்பு காட்டியதால் முரட்டு ஆட்டமும் லேசாக தலை காட்டியது.

பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் பந்து ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் 70 சதவீதம் இருந்தாலும், அந்த அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஸ்பெயின் முதல் லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியுடன் (3–3) டிரா செய்து இருந்தது. ஈரான் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். அந்த அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 1–0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி இருந்தது.

மேலும் செய்திகள்