கால்பந்து
கால்பந்து வீரரின் வாரிசை சுமந்தால் பரிசு என்ற அறிவிப்பால் சர்ச்சை

ரஷியாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு பெண்களுக்கு வினோதமான பரிசு அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டது.
மாஸ்கோ, ரஷியாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு பெண்களுக்கு வினோதமான பரிசு அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டது. அதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் ரொக்கப்பரிசும், அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் ‘பர்கர்’ உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வருங்கால ரஷிய கால்பந்து அணிக்கு சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்க உதவும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து இணையதளங்களில் பகிரங்கமாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் தனது பரிசு அறிவிப்பை வாபஸ் பெற்றதுடன், மக்களிடம் மன்னிப்பும் கோரி இருக்கிறது. அத்துடன் தங்களது அறிவிப்பு விளம்பரங்களையும் உடனடியாக இணைய தளத்தில் இருந்து நீக்கியது.