அர்ஜென்டினா அணியை ஊதி தள்ளியது, குரோஷியா 3-0 கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை ஊதி தள்ளி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Update: 2018-06-22 22:15 GMT

நிஸ்னி நவ்கோரோட், 

உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை ஊதி தள்ளி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சியின் ஆட்டம் எடுபடாமல் போனது.

லீக் ஆட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நிஸ்னி நவ்கோரோட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அதேநேரத்தில் தடுப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட குரோஷியா அணி அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தை கையாண்டு எதிரணியின் கோல் எல்லையையும் முற்றுகையிட்டு கோல் அடிக்க முனைப்பு காட்டியது. இரு அணியினருக்கும் சில நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், அதனை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணாக்கினார்கள். முதல் பாதியில் இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

கோல் கீப்பரின் தவறால் கோல்

பிற்பாதியிலும் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. இரு அணி வீரர்களின் கால்களிலும் பந்து மாறி, மாறி வலம் வந்தன. அத்துடன் பந்தை தங்கள் வசப்படுத்த முயற்சி செய்கையில் இரு அணி வீரர்களும் சில நேரங்களில் முரட்டு ஆட்டத்திலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு அணி வீரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளும் ஏற்பட்டது. 53–வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. குரோஷியா வீரர் கோலை நோக்கி அடித்த பந்தை அர்ஜென்டினா அணியின் பின்கள வீரர் மெர்காடோ, கோல் கீப்பர் கபல்லேரோவை நோக்கி திருப்பினார். அதனை தடுத்து வேறுபக்கம் திருப்பாமல் கோல் கீப்பர் கபல்லேரோ மீண்டும் மெர்காடோவுக்கு கவனக்குறைவாக பாஸ் செய்தார். கோல் கீப்பர் காலால் தூக்கி அடித்து திருப்பிய அந்த பந்தை கோலின் அருகில் நின்ற குரோஷிய வீரர் ரெபிச் ‘புல்டாஸ்’ பந்தை அடிப்பது போல் காலால் மடக்கி அடித்து கோலுக்குள் அனுப்பி அதிர வைத்தார். எதிர்பாராத இந்த கோலால் போட்டியை பார்த்த அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமின்றி, அந்த அணியின் வீரர்களும் நிலை குலைந்து போனார்கள். அதன் பிறகு அர்ஜென்டினா அணியின் உத்வேகம் தளர்ந்து போனது. அது முதல் குரோஷிய அணியினர் ஆட்டம் மேலோங்க ஆரம்பித்தது.

63–வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. கோலின் அருகில் கிடைத்த அந்த வாய்ப்பை மெசா, மெஸ்சி ஆகியோர் கோட்டை விட்டனர். 80–வது நிமிடத்தில் குரோஷியா அணி 2–வது கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் 25 அடி தூரத்தில் இருந்து அடித்த பந்து வியக்க வைக்கும் வகையில் கோலுக்குள் அதிரடியாக புகுந்தது.

குரோஷியா அபார வெற்றி

கடைசி நிமிடத்தில் குரோஷியா அணி 3–வது கோலை அடித்தது. இவான் ராக்டிச் இந்த கோலை அடித்தார். அர்ஜென்டினா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. கடந்த ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை வீணடித்து ஏமாற்றம் அளித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் ஏமாற்றம் அளித்தார்.

முடிவில் குரோஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை ஊதி தள்ளி 2–வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியில் 3 வீரர்களுக்கும், குரோஷியா அணியில் 4 வீரர்களுக்கும் நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை செய்தார்.

அடுத்த சுற்றுக்கு தகுதி

இந்த வெற்றியின் மூலம் குரோஷியா அணி 20 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த சுற்றுக்கு (நாக்–அவுட்) முன்னேறியது. அந்த அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்று இருந்தது. முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியுடன் டிரா (1-1) கண்டு இருந்த அர்ஜென்டினா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இதன் மூலம் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி இருக்கிறது.

லீக் சுற்றில் 60 ஆண்டுகளில் மோசமான தோல்வி

* உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி, தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு அணிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முந்தைய 4 ஆட்டங்களில் குரோஷியா அணி, தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருந்தது.

* 1958–ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து லீக் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். கடைசியாக 1958–ம் ஆண்டில் செக்கோஸ்லோவாக்கியா அணிக்கு எதிராக அர்ஜென்டினா அணி 1-6 என்ற கோல் கணக்கில் கண்ட தோல்வியே உலக கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் அந்த அணியின் மோசமான தோல்வியாக உள்ளது.

* 1974–ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களில் அர்ஜென்டினா அணி வெற்றி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும்.

* உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் குரோஷியா அணி வெற்றியை சுவைத்து இருப்பது இது 2–வது முறையாகும். இதேபோல் 1998–ம் ஆண்டு உலக கோப்பையில் முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் அரைஇறுதி வரை அந்த அணி முன்னேறியது.

கண்கலங்கிய மரடோனா

அர்ஜென்டினா–குரோஷியா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தை அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்ளாள் நட்சத்திர வீரரும், ஜாம்பவானுமான மரடோனா ஸ்டேடியத்துக்கு நேரில் சென்று கண்டு களித்தார். அர்ஜென்டினா அணி பின் தங்கி இருக்கையில் மிகவும் பதற்றத்துடனும், சோகத்துடனும் காணப்பட்ட மரடோனா அடிக்கடி கைவிரல் நகத்தை கடித்த படி இருந்தார். அர்ஜென்டினா அணி தோல்வியை தழுவியதும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததை டெலிவி‌ஷன் ஒளிபரப்பின் மூலம் காண முடிந்தது.

அர்ஜென்டினா அணி பயிற்சியாளர் மன்னிப்பு கேட்டார்

தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் சாம்பாவ்லி அளித்த பேட்டியில், ‘குரோஷியா அணியிடம் கண்ட தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அர்ஜென்டினா அணி வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இதனால் மெஸ்சியின் திறமையான செயல்பாடு கூட மங்கி போனது. குரோஷியா மிகவும் சிறப்பான அணியாகும். கோல் வாங்கிய பிறகு எங்களது ஆட்டம் உணர்வுபூர்வமாக தளர்ந்து விட்டது. அதன் பிறகு ஆட்டத்தின் போக்கை எங்கள் அணியினரால் கடைசி வரை மாற்ற முடியவில்லை. இந்த தோல்வியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் திட்டமிட்டப்படி ஆட்டத்தின் போக்கு அமையவில்லை’ என்று தெரிவித்தார்.

அர்ஜென்டினா தோல்வி எதிரொலி:

கேரள ரசிகர் தற்கொலை?

குரோஷியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தோல்வியை சந்தித்தது அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்களை மட்டுமின்றி, அந்த அணியையும், அதன் கேப்டன் மெஸ்சியையும் நேசிக்கும் பிற நாட்டு ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது. அர்ஜென்டினா தோல்வி கண்டதும், போட்டியை காண நேரில் சென்று இருந்த அந்த நாட்டு ரசிகர்கள் கண்ணீரும், கம்பலையுமாக ஸ்டேடியத்தை விட்டு சோகத்துடன் கலைந்து சென்றதை காண முடிந்தது.

அர்ஜென்டினா அணியின் அதிர்ச்சி தோல்வி கால்பந்தை அதிகம் விரும்பும் கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த 30 வயதான டினு அலெக்ஸ் என்ற ரசிகரையும் கணிசமாக கவலை அடைய செய்தது. இந்த தோல்வியால் மனம் உடைந்த மெஸ்சியின் தீவிர ரசிகரான அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகு திரும்பவில்லை. இது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது வீட்டு அறையில் சோதனை செய்ததில் அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் அவர், ‘அர்ஜென்டினா அணியின் தோல்வியால் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதனால் தனது வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். டினு அலெக்ஸ் எங்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டது. அந்த நாய் அருகில் உள்ள ஆறு வரை ஓடிச் சென்று நின்று விட்டது. இதனால் டினு அலெக்ஸ், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஆற்றுப்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்