கால்பந்து
அகதி, கால்பந்து அணியின் தலைவனான கதை..!

லுகா மோட்ரிச்... குரோஷிய கால்பந்து அணியின் கேப்டன், சிறந்த நடுகள வீரர், ரியல் மாட்ரிட் கிளப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்...
லுகாவை பற்றி இப்படி பெருமையாக பேசிக்கொண்டே இருக்கலாம். இன்று குரோஷிய கால்பந்து அணியின் தலைவனாக விளையாடிக்கொண்டிருக்கும் லுகா, ஒரு காலத்தில் வீடு இல்லாத அகதியாக நடுதெருவில் அவதிப்பட்டவர். அகதிகள் முகாமில் கடினமான சூழலில் வளர்ந்த லுகாவிற்கு கால்பந்து மட்டுமே உற்றதுணையாக இருந்திருக்கிறது. அந்த கதையை புரட்டி பார்க்கலாம் வாங்க..

1985-ம் ஆண்டு ஸடான் ஒப்ரோவாஹியில் பிறந்த மோட்ரிச், 1990-ல் சுதந்திர போராட்டம் தொடங்கும் வரை அங்கு தான் தனது குடும்பத்துடன் இருந்தார். செர்பிய படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்கவே, லுகாவின் சொந்த ஊர் மோசமாக தாக்கப்பட்டதாம். இந்த போரில் லுகாவின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கியிருந்த லுகாவை அவரது பெற்றோர் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தாக்குதல், லுகாவின் தாத்தா உயிரை பறித்து விட்டது. சில நாட்கள் தாக்குபிடித்த லுகா குடும்பம், செர்பிய படைகளிடமிருந்து தங்களை காப்பாற்ற நினைத்து, சொந்த ஊரை விட்டு புலம் பெயர்ந்தனர். பீரங்கி வண்டிகள், துப்பாக்கி முனைகள், பதுங்கு குழிகள் என உயிரை பணயம் வைத்து 40 கிலோமீட்டர் கடந்து, ‘ஸடார்’ என்னும் துறைமுக நகரில் தஞ்சம் புகுந்தனர். சொந்த ஊரில் கிடைக்கும் மரியாதை, தஞ்சம் புகுந்த ஊரில் எதிர்பார்க்க முடியாது என்பதால், ஸடார் நகரில் அகதிகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள். முன்பிருந்த ஊருக்கும், ஸடார் நகருக்கும் வெறும் 40 கிலோ மீட்டர்கள்தான் இடைவெளி என்றாலும், அவசர கதியில் மூட்டை முடிச்சுகளோடு ஸடார் நகருக்கு வந்ததால், சொந்த நாட்டிலேயே அகதிகளை போல நடத்தப்பட்டனர். அந்தசமயம் போர் தாக்குதலுக்கு ஆளான மக்களை தங்க வைக்க, சிறுசிறு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில் லுகாவின் குடும்பம் தஞ்சம் புகுந்தது.

குடும்பத்தை கவனித்தது போக எஞ்சியிருக்கும் நேரத்தில் கால்பந்தை உதைத்துக் கொண்டே இருப்பாராம். அங்குதான் லுகாவின் கால்பந்து வாழ்க்கை உதயமானது. அகதிகள் முகாமின் ஒரு மூலையில் தங்கியிருந்தாலும், அங்கும் கால்பந்து விளையாடுவார்.

width="794" />

‘‘அகதி சிறுவன் ஒருவன், அகதி விடுதியின் நடைபாதைகளில் தூங்க செல்லும் நேரத்தில் கூட கால்பந்து விளையாடிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்ட நான் அதிசயித்தேன். அந்த சிறுவன் இன்று குரோஷியாவின் தலைசிறந்த கால்பந்து வீரனாகி விட்டான். அவன் தான் லுகா மோட்ரிச்’’ இவ்வாறு கூறியவர் லுகாவை கால்பந்து வீரனாக உருவாக்கிய, ஜோசப் பஜிலோ. இவரே அகதி என்ற பெயரோடு சுற்றித்திரிந்த சிறுவனை, கால்பந்து பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததோடு, கால்பந்து விளையாட்டிலும் வளர்த்தெடுத்தவர்.

‘‘லுகா மோட்ரிச், இளம் கால்பந்து வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். இப்போது குழந்தைகள் மோட்ரிச்சை பார்த்து வியந்து அவரை போல விளையாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதற்கு லுகா சரியான நபர்தான். ஏனெனில் அவனுடைய வாழ்க்கையில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம். இளவயதில் சொந்த ஊரை இழந்தான். பிறகு அகதிகள் முகாமில் தஞ்சமடைந்து, ஊர்மக்களின் முன்னிலையில் அகதியாக சுயமரியாதையை இழந்தான். உள்ளூர் கால்பந்து அணிகளிடம் விளையாடியபோது ‘அகதி’ என்ற பழிச்சொல்லால் அவமதிக்கப்பட்டான். இவை அனைத்திற்கும் மேலாக, லுகாவின் விளையாட்டை கண்டு பொறாமைப்பட்டவர்கள், அவனை ஒருசில முறை அடித்து துவைத்ததும் உண்டு. இத்தகைய தோல்விகள்தான் லுகாவை வலுப்படுத்தியிருக்கின்றன. இல்லையேல், இடிபாடு களில் சிக்கியவன் இன்று ஆக்ரோஷமாக ஓடமுடியுமா..?, இல்லையேல் ‘அகதி’ என்று கிண்டல் அடித்தவர் களின் அணிக்கே தலைவனாக பொறுப்பேற்றிருக்க முடியுமா..? சொல்லுங்கள்’’ இவ்வாறு ஜோசப் பஜிலோ கூறுகிறார்.

‘‘உலகக்கோப்பையில் அரை இறுதியை கூட தாண்டாத அணி என்று இகழப்பட்ட குரோஷிய அணி, இன்று உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு என்னுடைய நண்பன் லுகாவே காரணம். அவன் நிச்சயம் சாதிப்பான். அவனது வைராக்கியம், அவனை சாதிக்க வைக்கும்’’ என்கிறார், லுகாவின் சிறு வயது நண்பரும் அவருடன் பயிற்சி பெற்றவருமான மரிஜான் புல்ஜட்.

அன்று ‘ஸடார் நகரின் அகதி’ என கிண்டல் செய்யப்பட்ட லுகா, இன்று ‘ஸடாரின் கால்பந்து கடவுள்’ என புகழப்படுகிறார். லுகா தனது கால்பந்து கனவிற்காக பல்வேறு தடைகளை தாண்டியும், பல கனவுகளை இழந்தும் தான் இந்த தூரத்தை அடைந்திருக்கிறார். வாழ்க்கையில் போராடினால் எதுவும் சாதிக்கலாம் என்பதற்கு லுகா மோட்ரிச்சின் வாழ்க்கையே ஒரு சாட்சி. ‘ஸடாரின் கால்பந்து கடவுள்’ உலகக் கோப்பை போட்டிகளில் அதிசயம் நிகழ்த்துவாரா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.