கால்பந்து
உலககோப்பை கால்பந்து போட்டி: 6-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை பந்தாடியது இங்கிலாந்து அணி

உலககோப்பை கால்பந்து போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. #FifaWorldCup2018
மாஸ்கோ, 

உலககோப்பை கால்பந்து போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) தொடங்கிய ஆட்டத்தில் தரவரிசை 12-ல் உள்ள இங்கிலாந்து அணி, 55-வது தரவரிசையில் இருக்கும் பனாமா அணியை (பிரிவு ஜி) எதிர்க்கொண்டது.

போட்டி தொடங்கிய 8-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணியின் வீரர் ஜான் ஸ்டோன்ஸ் கோல் அடிக்க, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் பதறிப்போன பனாமா அணியை பந்தாடிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 5 கோல்கள் அடித்து வீரநடை போட்டது. பின்னர் இரண்டாம் பாதியின் 68-வது நிமிடத்திலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரிகேன் கோல் அடிக்க பனாமா அணி பரிதாப நிலைக்கு சென்றது. இதனிடையே பனாமா அணியின் வீரர் ஃபெலிபே பாலோய் 78-வது நிமிடத்தில் கோல் அடித்தது அந்த அணிக்கு ஆறுதலாய் அமைந்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரிகேன் தலா 3 கோலும், ஜான் ஸ்டோன்ஸ் 2 கோலும் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.