ஜப்பான்–செனகல் ஆட்டம் ‘டிரா’

உலக கோப்பை கால்பந்து தொடரில் ‘எச்’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி, ஆப்பிரிக்க அணியான செனகலை எதிர்கொண்டது.

Update: 2018-06-24 21:03 GMT

எகடெரின்பர்க், 

உலக கோப்பை கால்பந்து தொடரில் ‘எச்’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி, ஆப்பிரிக்க அணியான செனகலை எதிர்கொண்டது. 11–வது நிமிடத்தில் ஜப்பான் கோல் கீப்பர் கவாஷிமாவின் தவறால் செனகலுக்கு கோல் கிடைத்தது. தனது கைக்கு சாதாரணமாக வந்த பந்தை பிடிப்பதற்கு பதிலாக அதை தள்ளிவிட்டார். அப்போது அருகில் நின்ற செனகல் கேப்டன் சாடியோ மேனின் காலில் பட்டு பந்து வலைக்குள் சென்றது. ஆனால் இந்த அதிர்ச்சியில் இருந்து ஜப்பான் சிறிது நேரத்தில் மீண்டது. 34–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் தகஷி இனுய் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார்.

பிற்பாதியில் 71–வது நிமிடத்தில் செனகல் வீரர் மவ்சா வாக் அதிரடியாக ஒரு ஷாட் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலையை உருவாக்கினார். அடுத்த 7–வது நிமிடத்தில் ஜப்பானின் மாற்று ஆட்டக்காரர் கெய்சுக் ஹோண்டா பந்தை கோலுக்குள் அனுப்பி பதிலடி கொடுத்தார். இதன் மூலம் மூன்று உலக கோப்பை தொடர்களில் (2010, 2014, 2018–ம் ஆண்டு) கோல் போட்ட முதல் ஜப்பான் வீரர் என்ற மகிமையை அவர் பெற்றார். முடிவில் இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அடுத்த சுற்றை நெருங்கியுள்ள இவ்விரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

மேலும் செய்திகள்