கால்பந்து
உலகக்கோப்பை கால்பந்து: மொராக்கோ, ஸ்பெயின் அணிக்கு இடையிலான ஆட்டம் ‘டிரா’

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ, ஸ்பெயின் அணிக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. #FIFAWorldCup2018
ரஷ்யா,

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

இதில் ‘பி’ பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி தனது கடைசி லீக்கில் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோவை இன்று சந்தித்தது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு ஸ்பெயின் அணி குறைந்தது டிரா-ஆவது செய்ய வேண்டும். அதே சமயம் மொராக்கோ அணி 2 தோல்விகளுடன் முன்பே நாக்–அவுட் சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.

இந்நிலையில் இன்று நடந்த லீக் ஆட்டம் துவக்கத்திலிருந்தே பரபரப்பாக காணப்பட்டது. முதலில் மொராக்கோ அணியின் சார்பில் பவுடேய்ப் 1 கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஸ்பெயின் அணியின் சார்பில் இஸ்கோ 1 கோல் அடித்து அதனை சமன் செய்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் மொராக்கோ அணியின் சார்பில் யூசுப் என்-நெஸ்ரி 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இறுதியில் ஸ்பெயின் அணி வீரர் லாகோ அஸ்பாஸ் 1 கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. இதனால் மொராக்கோ, ஸ்பெயின் அணிக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.