கால்பந்து
3-0 கோல் கணக்கில் போலந்தை போட்டுத் தள்ளிய கொலம்பியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டத்தில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் போலந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.
கஜன்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கஜன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘எச்’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் கொலம்பியா-போலந்து அணிகள் மோதின. முதல் லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டு இருந்த இந்த இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்து கட்டி களம் கண்டன.

தொடக்கம் முதலே கொலம்பியா அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. பந்து அதிக நேரம் கொலம்பியா அணி வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் வலம் வந்தது. போலந்து அணிக்கு கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகள் வீணானது. 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கோலை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் யெர்ரி மினா தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். போலந்து அணி கேப்டன் ராபர்ட் லிவான்டோஸ்கி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சியை கொலம்பியா அணியின் கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா அபாரமாக தடுத்து நிறுத்தினார்.

70-வது நிமிடத்தில் கொலம்பியா அணி 2-வது கோல் போட்டது. அந்த அணி வீரர் ஜூவான் குயின்ட்ரோ கடத்தி கொடுத்த பந்தை, கேப்டன் பால்காவ், எதிரணி கோல் கீப்பரை ஏமாற்றி எளிதாக கோல் அடித்தார். 75-வது நிமிடத்தில் கொலம்பியா அணி வீரர் ஜூவான் குயட்ராடோ கோல் அடித்தார். பின்கள வீரர்கள் மற்றும் கோல் கீப்பரை போக்கு காட்டி அவர் இந்த கோலை அடித்தார்.

பதில் கோல் திருப்ப போலந்து அணி எடுத்த முயற்சிகளுக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை. முடிவில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. கொலம்பியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டு இருந்தது. தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்த போலந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அந்த அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியிடம் தோற்று இருந்தது.

நாளை மறுநாள் (28-ந் தேதி) நடைபெறும் ‘எச்’ பிரிவு கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான் அணி, போலந்தையும், செனகல் அணி, கொலம்பியாவையும் சந்திக்கின்றன. ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ள ஜப்பான், செனகல் அணிகள் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். 3 புள்ளிகள் பெற்றுள்ள கொலம்பியா, செனகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க முடியும்.