கால்பந்து
அர்ஜென்டினா ஆட்டத்தை நேரில் பார்த்த மரடோனா தடுமாறி விழுந்தார்

அர்ஜென்டினா ஆட்டத்தை நேரில் பார்த்த மரடோனா தடுமாறி விழுந்தார். தற்போது நலமுடன் இருப்பதாக மரடோனா அறிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

அர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தை அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா நேரில் பார்த்து ரசித்தார். முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கையில் அமர்ந்து பார்த்த அவர் ஆட்டம் தொடக்கம் முதலே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார். அர்ஜென்டினா கோல் அடித்ததும் எழுந்து குதித்து மகிழ்ந்த மரடோனா, நைஜீரியா பதில் கோல் திருப்பியதும் சோகத்தில் ஆழ்ந்தார். அதன் பிறகு அர்ஜென்டினா மேலும் கோல் அடிக்குமா? என்று பதற்றத்துடன் ஆட்டத்தை பார்த்த மரடோனா, கடைசி கட்டத்தில் அர்ஜென்டினா 2-வது கோல் அடித்ததும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்ததுடன், கைவிரலால் ஆபாசமாக சைகை காட்டினார்.

பின்னர் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் இருக்கையில் இருந்து தடுமாறி கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். உடனடியாக ஸ்டேடியத்தில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அத்துடன் அவர் சற்று நேரத்தில் தனி விமானம் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர். ‘நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்’ என்று மரடோனா தனது இன்ஸ்ட்ராகிராமில் அறிவித்து இருக்கிறார்.